ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு பெற்றவர்களுக்கு பணி நீடிப்பு உண்டு
அவசர நடவடிக்கைக்காக.
******************************
ஜூன் 30-ஆம் தேதியுடன் பணி நிறைவு
பெற்றவர்களுக்கு பணி நீடிப்பு உண்டுதொடக்கக்கல்வி இயக்குனர் அவர்கள் அறிவிப்பு.
தொடக்கக்கல்வி இயக்குனர் முனைவர் அ.கருப்பசாமி அவர்களை இன்று (30.06.2019) மாலையில் இயக்ககத்தில் ஐபெட்டோ அகில இந்திய செயலாளரும் மாநிலப் பொருளாளரும் சந்தித்து பணி நீடிப்பு குறித்து தெளிவுபடுத்த கேட்டுக் கொண்டார்கள். தொடக்கக் கல்வி இணை இயக்குனர் (நிர்வாகம்) ஆனந்தி அவர்களும், தொடக்க கல்வி இணை இயக்குனர் (தனியார் பள்ளி) பாஸ்கர சேதுபதி அவர்களும் இந்த பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டார்கள். சில மாவட்டங்களில் திருச்சி, சேலம், தஞ்சாவூர், தேனி போன்ற மாவட்டங்களில் அரசாணை எண் 261ஐ 20 12 2018 ன் படி அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணி ஓய்வு பெற்றவர்களுக்கு உபரி ஆசிரியர் பணியிடங்கள் இருப்பதால் பணி நீடிப்பு இல்லை என அவர்களை 30.06.2019 உடன் விடுவித்து விட்டார்கள். ஐபெட்டோ அகில இந்திய செயலாளர் அவர்கள் அந்த அரசாணையில் அப்படி அறுதியிட்டு சொல்ல வில்லை என விளக்கத்துடன் எடுத்துரைத்தார். பிறகு தொடக்கக்கல்வி இயக்குனர் அவர்களின் ஆய்விற்கு பின் பணிநிறைவு பெறுபவர் பள்ளியில் உபரி பணியிடம் இருந்தாலும் அந்த வருவாய் மாவட்ட அளவில் உபரி பணியிடங்களையும், காலிப் பணியிடங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து அந்த மாவட்டத்திற்குள் பணி நிறைவு செய்வதற்கு வாய்ப்பு இருப்பின் பணி நீடிப்பு வழங்கலாம். மாநிலத்தில் 4 மாவட்டங்களைத் தவிர ஏனைய மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் பணி நீடிப்பு வழங்கலாம்.
திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அவர்களிடமும், லால்குடி மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களிடமும் இந்த விளக்கத்தை அளித்து திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும், இடைநிலை ஆசிரியர்களுக்கும் பணி நீடிப்பு வழங்கலாம் என தெரிவித்தார்கள். அதேபோல் சேலம் மாவட்டத்திற்கும் இந்த குறிப்பாணை வழங்கப்பட்டது. இதற்கு மேல் எந்த மாவட்டத்திலாவது பணி நீடிப்பு மறுத்தால் அந்த வட்டாரக் கல்வி அலுவலரிடம் நேரில் சென்று நாளை ஒன்றாம் தேதி பணி நீடிப்பு ஆணையினை பெறுங்கள். மாவட்டக் கல்வி அலுவலர் அவர்களையும் உடனே சந்தித்து விளக்கத்தை தாருங்கள். மெத்த அவசரப் பணியாக கருதி பொறுப்பாளர்கள் பணி நீடிப்பு பெறுவதற்கு முழு ஒத்துழைப்புத் தர வேண்டுமாய் வலியுறுத்தி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
வட்டாரக் கல்வி அலுவலர்கள் அனைவரும் அரசாணையை தெளிவாகப் படித்து பத்து மாதம் அவர்கள் பணியாற்றும் வாய்ப்பினை அளிக்க வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பணி நீடிப்பை வழங்குவதற்கு எவ்வித தயக்கமும் காட்டத் தேவையில்லை என அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். வட்டார கல்வி அலுவலர்களுடைய எண்ணத்தையும், செயல்பாட்டையும் தெரிந்து கொள்வதற்கு இது ஒரு வாய்ப்பாகும்.
அவசர நடவடிக்கையாக கருதி செயல்பட வேண்டுமாய் பொறுப்பாளர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வா.அண்ணாமலை, ஐபெட்டோ அகில இந்திய செயலாளர்.*