அரசுப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி அசத்திய சுற்றுவட்டார கிராமத்தினர்
புதுக்கோட்டை,ஜீன்.28: குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தி சுற்றுவட்டார கிராமத்தினர் அசத்தினார்கள்.
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் குடுமியான்மலை அரசு உயர்நிலைப்பள்ளியில் நூறுசதவீத தேர்ச்சியை பெற்றுத் தந்த ஆசிரியர்களுக்கும் மாவட்ட அளவில் சிறப்பிடம் பிடித்த மாணவர்களுக்கும் கிராமத்தின் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவில் நூறு சதவீதம் தேர்ச்சியை பெற்று தந்த ஆசிரியர்களுக்கு குடுமியான்மலை,மரிங்கிபட்டி,உருவம்பட்டி,காட்டுப்பட்டி,ஆணைப்பட்டி பகுதியை சேர்ந்த கிராம மக்கள் ஒன்றாக சேர்ந்து அனைத்து ஆசிரியர்களுக்கும் பொன்னாடை போர்த்தி கேடயம் வழங்கி பாராட்டினார்கள்.பின்னர் ஊர்ப்பொதுமக்கள் சார்பில் பள்ளியில் முதலிடமும் மாவட்ட அளவில் மூன்றாமிடமும் பிடித்த மாணவன் சக்திவேல்,இரண்டாம் பிடித்த மாணவன் கணேசன்,மூன்றாம் இடம் பிடித்த மாணவன் மணிகண்டன் ஆகியோருக்கு கேடயம் வழங்கிப் பாராட்டினார்கள்.
பள்ளி அளவில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவர்களுக்கு பள்ளி மேலாண்மைக்குழத் தலைவர் கல்யாணசுந்தரம் தலா ஆயிரம் வழங்கிப் பாராட்டினார்கள்.
அதே போல் சமூக அறிவியல் நூறு மதிப்பெண்கள் மாணவர்கள் மணிகண்டன்,மற்றும் 2016-17 கல்வி ஆண்டில் நூறு மதிப்பெண் பெற்ற மாணவர்கள் சாந்தி,குமரேசன்,ஹர்சவர்த்தினி ஆகியோருக்கும் ரூ 1000 வழங்கி சமூக அறிவியல் ஆசிரியர் சௌந்திரபாண்டி பாராட்டினார்.
பள்ளி ஆசிரியர்கள் சார்பில் புதிதாக ஆறாம் வகுப்பு சேர்ந்த மாணவர்களுக்கு ஆங்கில பட்டதாரி ஆசிரியை ஆர்த்தி பொன்னாடை போர்த்தியும் பூங்கொத்து கொடுத்தும் வரவேற்று சிறப்பித்தார்.
தமிழாசிரியர் ரவிச்சந்திரன் வரவேற்றுப் பேசினார்.தலைமை ஆசிரியர் ( பொறுப்பு) அடைக்கண் தலைமை தாங்கினார்.
பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஜெய்சிங்,கல்வித் தொலைக்காட்சி மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர் முனியசாமி,பள்ளி மேலாண்மைக் குழுத்தலைவர் இராஜேந்திரன் ,மற்றும் அருகாமை பள்ளி ஆசிரியர்கள் சுமதி,மாரிக்கண்ணு,திருப்பதி,சசிகலா,பத்மா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.முன்னதாக பள்ளி மாணவ,மாணவியர்களின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றது.முடிவில் கணித ஆசிரியர் கனகு சபை நன்றி கூறினார்.உடற்கல்வி ஆசிரியர் வடிவேல் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.விழாவில் சுற்றுவட்டார பள்ளி ஆசிரியர்கள்,முக்கிய பிரமுகர்கள்,பெற்றோர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.