கடைசி நேர அறிவிப்புகளால் மாணவர்கள் குழப்பம்
கடைசி நேர அறிவிப்புகளால், பொறியியல் படிக்க ஆர்வம் காட்டும் மாணவர்களை அண்ணா பல்கலைக்கழகம் குழப்பத்தில் ஆழ்த்துவதாக புகார் எழுந்திருக்கிறது.
2019-ம் ஆண்டுக்கான பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கியிருக்கிறது. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு, கடந்த 25-ம் தேதி தொடங்கியது. முதல்நாளில் 143 மாற்றுத்திறனாளி மாணவர்கள் கலந்தாய்வில் கலந்துகொண்ட நிலையில், அவர்களில் 101 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. விளையாட்டுப் பிரிவின் கீழ் 1,650 மாணவர்களுக்குக் கலந்தாய்வு இரண்டாவது நாளான 26-ம் தேதி நடந்தது. இதில், 330 மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. அதன்பின்னர், ஜூன் 26, 27, 28 ஆகிய தேதிகளில் தொழிற்கல்வி பிரிவுக்கான கலந்தாய்வுக்கு 1400 பேர் அழைக்கப்பட்டிருந்தனர். இதில், 900-க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன. சிறப்புப் பிரிவினருக்கான கலந்தாய்வு முடிந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை பல்வேறு கட்டங்களாக நடைபெற இருக்கிறது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் கல்லூரிகளில், பொறியியல் படிப்பில் சேர 1.33 லட்சம் பேர் ஆன்லைனில் விண்ணப்பித்திருந்தனர். அதில், 1.06 லட்சம் பேர் கொண்ட தரவரிசைப் பட்டியலை அண்ணா பல்கலைக்கழகம் கடந்த 20-ம் தேதி வெளியிட்டது. இந்த ஆண்டு, மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை அண்ணாப் பல்கலைக்கழகம் நடத்த மறுத்த நிலையில், தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் நடத்திவருகிறது. இந்த ஆண்டு பொறியல் படிப்புகளுக்கான கலந்தாய்வில் 70,000 மாணவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்ப்பதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம், அடிப்படை கட்டமைப்பு வசதிகள், ஆய்வகங்கள், போதிய ஆசிரியர்கள் எண்ணிக்கை மற்றும் மாணவர் சேர்க்கைக் குறைவு உள்ளிட்ட காரணங்களால் தரமற்ற கல்லூரிகள் என 89 கல்லூரிகளை அண்ணா பல்கலைக்கழகம் பட்டியலிட்டதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. அண்ணா பல்கலைக்கழக வரலாற்றில் முதல்முறையாக, உறுப்புக் கல்லூரிகளிலும் சென்னை ஐஐடி, ஐஐஎஸ்சி பெங்களூரு மற்றும் திருச்சி என்.ஐ.டி மற்றும் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள் என 170 பேர் கொண்ட குழு ஆய்வு ஒன்றை நடத்தி முடித்திருக்கிறது. அந்த ஆய்வின் முடிவில், போதிய வசதிகள் இல்லை என்று கூறி 250 கல்லூரிகளிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், அந்த 89 கல்லூரிகளின் பட்டியலை தனியாக வெளியிடாமல், அண்ணா பல்கலைக்கழகம் கலந்தாய்வுக்கான 539 கல்லூரிகளின் பட்டியலையும் மொத்தமாக வெளியிட்டுள்ளது. அந்த குறிப்பிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு ஒதுக்கப்பட்ட இடங்களும் குறைக்கப்பட்டுள்ளன. இது, மாணவர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து, கல்வியாளர் `ஆனந்தம்’ செல்வகுமாரிடம் பேசினோம். “ தமிழகத்தில் பொதுப் பிரிவினருக்கான பொறியியல் கலந்தாய்வு ஜூலை 3-ம் தேதி தொடங்க இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் 89 பொறியியல் கல்லூரிகள் தரமற்றவை என அண்ணா பல்கலைக்கழகம் 2 நாள்களுக்கு முன்பு அறிவித்திருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது. ஆனால், அந்தக் கல்லூரிகள் குறித்த தகவல்களை அண்ணா பல்கலைக்கழகம் தனியாக எங்கும் வெளியிடவில்லை.
மாறாக, பொறியியல் கலந்தாய்வுக்காக பட்டியலிடப்பட்டுள்ள கல்லூரிகளின் பெயருக்கு அருகில், 1 மற்றும் 2 என எண்கள் மட்டுமே இடம்பெற்றுள்ளன. கல்லூரியின் பெயருக்கு அருகில் 1 என்ற எண் இடம்பெற்றிருக்கும் நிலையில், அது அண்ணா பல்கலைக்கழகத்தால் நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்ட கல்லூரி என்பதும், 2 என எண் இடம்பெற்றிருக்கும் கல்லூரிகள், தேசிய தொழில்நுட்பக் கவுன்சிலின் நடவடிகைக்கு உள்ளாகியிருக்கும் கல்லூரிகள் என்றும் தெரியவருகிறது. இது, பொறியியல் படிக்க எண்ணும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களிடையே ஒருவித குழப்பத்தையே ஏற்படுத்தும். அந்தக் கல்லூரிகள் எவை என்பதிலும் ஒரு தெளிவான புரிதல் மாணவர்களிடமோ அல்லது பெற்றோர்களிடமோ இல்லை என்பது தற்போதைய நிலை.
அந்தக் குறிப்பிட்ட கல்லூரிகள் தரமற்றவை என்பது அண்ணா பல்கலைக்கழகத்துக்கு இரண்டு நாள்களுக்கு முன்னர்தான் தெரியுமா? இதுபோன்ற அறிவிப்புகளை கடைசி நேரத்தில் வெளியிட்டு ஏன் மாணவர்களைக் குழப்ப வேண்டும். ஏற்கெனவே, மாணவர்களுக்கு கட் ஆஃப் 100 மதிப்பெண்ணுக்கா 200 மதிப்பெண்ணுக்கா, கலந்தாய்வு நடைமுறை, நீட் தேர்வு இருக்கிறதா இல்லையா எனப் பல்வேறு குழப்பங்கள் பிளஸ் டூ முடித்த மாணவர்களுக்கு இருக்கும் நிலையில், இது அவர்களை மேலும் குழப்பத்துக்குள்ளாக்கும். இதுபோன்ற கடைசி நேர அறிவிப்புகளைத் தவிர்க்க அண்ணா பல்கலைக்கழகம், இதுபோன்ற ஆய்வுகளை ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் – நவம்பர் மாதங்களுக்குள்ளாக மேற்கொண்டு, அதன் முடிவுகளையும் உடனடியாக வெளியிட வேண்டும். அப்போதுதான், அந்த ஆய்வுகள் மாணவர்களுக்கு உதவிகரமாக இருக்கும். அடுத்த கல்வியாண்டில் பொறியியல் படிப்பில் சேர நினைக்கும் மாணவர்கள், கல்லூரிகளை அதன் உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை அடிப்படையாகக் கொண்டு தேர்வுசெய்ய முடியும்.
அதேபோல், கல்லூரியைத் தேர்வுசெய்யும் மாணவர்களும் அவர்கள் பெற்றோரும் குறிப்பிட்ட கல்லூரியைத் தேர்வுசெய்வதற்கு முன்பாக அந்தக் கல்லூரிக்கு ஒரு விசிட் அடிப்பது நலம். கல்லூரியில் உள்ள உள்கட்டமைப்பு வசதிகள், பேராசிரியர்கள் பற்றாக்குறை, ஆய்வகங்கள் உள்ளிட்டவைகளின் நிலை மற்றும் தொழிற்சாலைகளுடன் கல்லூரிகளுக்கு இருக்கும் தொடர்பு மற்றும் முந்தைய ஆண்டுகளில் படிக்கும் மாணவர்களின் நிலை ஆகியவை குறித்து நேரில் விசாரித்துக்கொள்வது நன்மை தரும். அதேபோல், மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, கல்லூரிகளின் தரத்தை முடிவு செய்யாதீர்கள். உதாரணமாக ஒரு கல்லூரியில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 90 சதவிகிதம் என்று கூறப்பட்டது. விசாரித்ததில், அந்தக் கல்லூரியில் தேர்வெழுதியது மொத்தமே 10 பேர்தான். அதில், 9 பேர் தேர்ச்சிபெற்றிருக்கின்றனர். அதேபோல், மற்றொரு கல்லூரியில் தேர்வெழுதிய 1,300 பேரில் 1100 பேர் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஆனால், அந்தக் கல்லூரியின் தேர்ச்சி விகிதம் குறைவு. மாணவர்கள் மற்றும் பெற்றோர், பொறியியல் கல்லூரிகளைக் கலந்தாய்வில் தேர்வு செய்கையில், இதையெல்லாம் கருத்தில்கொள்ள வேண்டும்” என்று முடித்துக் கொண்டார்.
இந்தநிலையில், 89 பொறியியல் கல்லூரிகள் மீது தண்டனை நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தங்கள் தரப்பில் இருந்து எந்த அறிக்கையும் வெளியாகவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் மறுத்துள்ளது.