மாதிரி பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்புவது எப்போது: ஒரே பள்ளியில் 15 பேருக்கு அயல்பணி - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Wednesday, July 24, 2019

மாதிரி பள்ளிகளில் காலிப்பணியிடம் நிரப்புவது எப்போது: ஒரே பள்ளியில் 15 பேருக்கு அயல்பணி


திண்டுக்கல் மாவட்டத்தில் மாதிரி


பள்ளியில்15 பேர் அயல்பணியாக நியமிக்கப்பட்டுள்ளனர். நிரந்தர ஆசிரியர் பணியிடத்தை நிரப்புவது எப்போது என ஆசிரியர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தமிழகத்தில் அரசு பள்ளிகளை தனியார் பள்ளிகளுக்கு இணையாக தரம் உயர்த்த அரசு முடிவு செய்தது. இதன் படி மாவட்டந்தோறும் ஒரு பள்ளி தேர்வு செய்யப்பட்டு மாதிரி பள்ளிகள் அறிவிக்கப்பட்டன. இந்த அறிவிப்பில் திண்டுக்கல் மாவட்டம் நத்தம் துரைக்கமலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியும் இடம் பிடித்தது. இதையடுத்து முதற்கட்டமாக ரூ.30 லட்சத்தில் ஸ்மார்ட் வகுப்பறை, ஒலிபெருக்கி, கண்காணிப்பு கேமரா, கழிப்பறை, போர்வெல் சீரமைப்பு உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இந்தாண்டு முதல் மாதிரி பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தியதில் இதுவரை 350 மாணவர்கள் சேர்ந்துள்ளனர். கூடுதலாக மாணவர்கள் சேர்ந்ததால் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டது.

இதையடுத்து அரசு பள்ளிகளில் மாணவர்களின் விகிதாச்சார அடிப்படையில் கூடுதலாக உள்ள ஆசிரியர்களை கண்டறிந்து அங்கு நியமனம் செய்ய திட்டமிட்டனர். அதன்படி, சென்ற மாதம் ஓராண்டுக்கு தற்காலிகமாக பணியாற்ற 15 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர்.ஆனால் அவர்கள் ஒரே மாதத்தில் தங்கள் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் தாங்கள் பணியாற்றிய பள்ளிகளுக்கு சென்று விட்டனர்.இதை சரிசெய்ய தற்போதும் வெகுதொலைவில் உள்ள கொடைக்கானல், ஆத்துார், அய்யம்பாளையம், வத்தலக்குண்டு, அகரம், வேம்பார்பட்டி, என்.பஞ்சம்பட்டியில் உள்ள ஆசிரியர்களை அயற்பணியில் நியமித்துள்ளனர். இதில் மாற்றுத்திறனாளி ஆசிரியரும் அடங்குவர். அயற்பணி ஆசிரியர்கள் இங்கு பணியாற்ற விரும்புவதில்லை.

நிரந்தர ஆசிரியர்கள் தேவை:

உயர்நிலை மேல்நிலை பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநில செய்தி தொடர்பாளர் முருகேசன் கூறியது: ஆசிரியர் பற்றாக்குறை ஏற்பட்டால், அருகில் இருக்கும் பள்ளியில் உள்ள உபரி ஆசிரியர்களைத்தான் நியமிக்க வேண்டும். நத்தம் மாதிரி பள்ளியில் வெகுதொலைவில் இருந்து 15 பேர் நியமித்த நிலையில், அவர்கள் ஒரே மாதத்தில் ஏற்கனவே பணியாற்றிய பள்ளிக்கு மாறுதல் பெற்று சென்றுவிட்டனர். தற்போது நியமிக்கப்பட்டுள்ளவர்களும் பல கி.மீ., தள்ளி இருக்கும் பள்ளிகளைச் சேர்ந்தவர்களே.

இவர்களை மாற்றம் செய்ததால் ஏற்கனவே பணியாற்றிய பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படுவர். திண்டுக்கல் மட்டுமின்றி மாநிலம் முழுவதும்மாதிரி பள்ளிகளில் இதே நிலை தான் உள்ளது. மாதிரி பள்ளிகளில் இருக்கும் காலிப் பணியிடங்களில் உடனே நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், என்றார்.

Post Top Ad