இலவசக் கட்டாயக் கல்வி; பெறப்பட்ட 1687 மெயில்கள்; அலட்சியம் காட்டிய பள்ளிக்கல்வித்துறை... ஆர்.டி.ஐ-ல் அம்பலம்
தமிழகத்தில் உள்ள தனியார் மற்றும் சுயநிதி மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் நலிவடைந்த மற்றும் கல்வி வாய்ப்பு மறுக்கப்பட்ட குழந்தைகளுக்கு 25 சதவிகித இடஒதுக்கீடு என்பது கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் வரையறுக்கப்பட்டது. இதன்படி கல்வி வாய்ப்பு மறுக்கப்படும் குழந்தைகளுக்கு அவர்களின்
இருப்பிடத்தைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் இடம் ஒதுக்கப்படும். அவர்களுக்கான கல்விக் கட்டணச் செலவை பள்ளிகளுக்கு மத்திய மாநில அரசுகள் ஆண்டுதோறும் வழங்கி வருகின்றன.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்
அதன்படி இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள் கடந்த ஏப்ரல் 18.4.2019 தொடங்கி 18.5.2019 வரை பள்ளிக்கல்வித் துறையின் இணைய பக்கத்தில் கொடுக்கப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் கீழ் 1,21,000 இடங்கள் நிரப்பப்பட்டதாகவும் இனி அரசுப் பள்ளிகளிலும் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள்போல மாணவர்களைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அண்மையில் ஊடகத்துக்கான பேட்டி ஒன்றில் தெரிவித்திருந்தார்.
ஆனால், "மாணவர் சேர்க்கைக்காகச் சொல்லப்பட்டிருந்த குறிப்பிட்ட காலத்தின் முதல் 20 நாள்கள் வரை ஆன்லைன் விண்ணப்ப தளங்கள் இயங்கவே இல்லை, அதன் பிறகு விண்ணப்ப தளங்கள் இயங்கினாலும் பள்ளிகளைத் தேர்ந்தெடுக்க முடியாத வகையில் அந்தத் தளம் மெதுவாக இயங்கியது. அரசு தளத்தில் அவர்கள் குறிப்பிட்டிருந்த '14417' என்கிற தொலைபேசி எண்ணும் இயங்கவில்லை. இப்படியிருக்க, '1,20,000 மாணவர்கள் சேர்க்கப்பட்டதாக அமைச்சர் செங்கோட்டையன் சொல்வது பொய்' என்று அண்மையில் வெல்பேர் கட்சியின் மாநிலச் செயலாளரான முகமது கவுஸ் புகார் எழுப்பியிருந்தார்.
முடங்கியிருந்த இணையதளம்
இணையதளத்தில் கொடுக்கப்பட்டிருந்த தொலைபேசி மற்றும் மெயில் தகவல் விவரங்கள்
மேலும் இதுதொடர்பாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் பிரிவு 2Jன் கீழ் RTE திட்ட இயக்குநரின் கணினியை ஆய்வு செய்ய முகமது கவுஸுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. அதே தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பெறப்பட்ட தகவலின்படி கட்டாயக்கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு 1687 மெயில்கள் வந்ததாகவும் அனைத்துக்குமே தொலைபேசி வழியாக பதில் அளிக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 23.7.2019 அன்று நுங்கம்பாக்கம் பள்ளிக் கல்வித்துறை இயக்குநரகத்தில் திட்ட இயக்குநர் அலுவலகக் கணினியை ஆய்வு முகமது கவுஸ் ஆய்வு செய்தார். ஆய்வில் கல்வித்துறையின் அலட்சியப் போக்கு தற்போது அம்பலமாகியுள்ளது.
ஆய்வில் என்ன நடந்தது?
சுமார் 12.,00 மணி அளவில் கல்வி உரிமைத்திட்ட ஒருங்கிணைப்பாளரின் கணினியில் ஆய்வு செய்யப்பட்டது. ஏப்ரல் முதல் மே வரையிலான காலகட்டத்தில் பெறப்பட்டதாகச் சொல்லப்படும் 1687 மெயில்களில் ஒன்றுக்குக்கூட பள்ளிக் கல்வித்துறை பதில் அளிக்கவில்லை, தொலைபேசியில் பதில் அளித்ததற்கான ஆவணம் எதுவும் அவர்களிடம் இல்லை. தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் அவர்கள் அளித்த தகவல்களும் பொய் என்பது தெரியவந்தது.
பொதுமக்கள் அனுப்பிய 1687 மெயில்களில் சில
பெறப்பட்ட ஆர்.டி.ஐ விவரம்
மெயில்களுக்கு பதிலே அளிக்காமல் பதில் அளித்ததாக ஏன் பொய் சொன்னீர்கள் என்று திட்ட ஒருங்கினைப்பாளரிடம் கேள்வி எழுப்பியதும், "இல்லை நான் மெயில்களுக்குத் தொலைபேசியில் பதில் அளிக்கவில்லை. தொலைபேசியில் எங்களுக்கு நேரடியாக வந்த அழைப்புகளுக்குத்தான் பதில் அளித்தோம்" என்று மாற்றிச் சொல்லிச் சமாளித்தார். மேலும், அவர் தரப்பில் நமக்குக் காண்பிக்கப்பட்ட பள்ளிச் சேர்க்கைக்கான போர்ட்டலிலும் மொத்தம் 69,761 மாணவர்கள் மட்டுமே சேர்க்கப்பட்டிருந்ததற்கான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றன.
ஆய்வு முடிந்து நம்மிடம் பேசிய வெல்ஃபேர் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது கவுஸ், "ஆய்வில் மெயில்கள் வந்திருக்கின்றன. ஆனால், வந்திருக்கும் எதிலுமே தொலைபேசி எண் போன்ற எதுவும் குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் அவர்கள் எப்படி அந்த மெயில்களுக்குத் தொலைபேசியில் பதில் அளித்திருக்க முடியும்? பல கிராமப் புறப்பகுதிகளிலிருந்து தமிழில் டைப் செய்து அனுப்பிக் கேட்டிருக்கிறார்கள். எப்படி அப்ளை செய்வது என்று தெரியாதவர்கள் உதவி கேட்டிருக்கிறார்கள். சில பள்ளிகள் தங்கள் பெயரே பட்டியலில் இல்லை என்று குறிப்பிட்டு மெயில் அனுப்பியிருக்கிறார்கள். அதற்கும் பதில் இல்லை. மெயிலில் தொலைபேசி எண் கொடுத்திருந்த நபர்களுக்கும் நாங்கள் அழைத்துப்பேசினோம். அவர்களும் தங்களுக்கு எந்த அழைப்பும் வரவில்லை என்றும் தானாகவே பணம்கட்டித்தான் படிக்க வைத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல் தெரிவித்தனர். தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் பொய்யான தகவல் தந்தது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் குற்றம். இந்தக் குற்றத்தில் ஈடுபட்ட அரசு அதிகாரிகளின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.
முகமது கவுஸ் (இடதுபுறம் இருப்பவர்)
பொதுத் தகவல் அலுவலர் கி.ரெங்கநாதனிடம், "1,687 மெயில்களுக்கும் தொலைபேசியில் பதில் அளிக்கப்பட்டதாக ஏன் பொய்யான தகவலை அளித்தீர்கள்?" என்று கேள்வி எழுப்பியதற்கு "நீங்கள் அப்பீல் செய்யுங்கள் பார்த்துக்கலாம்!" என்று அலட்சியமாக பதில் சொல்லிவிட்டு நகர்ந்தார்.
அலட்சியம் அம்பலாமாகியிருக்கும் நிலையில் இது திட்டமிட்டே செய்யப்பட்டதா, வழக்கமாகவே இப்படித்தான் நடக்கிறதா என்ற கேள்விகள் எழுகின்றன. இனிவரும் காலங்களிலாவது மாணவர்கள் சேர்க்கையில் அலட்சியப்போக்கும் தில்லுமுல்லும் இல்லாமல் நேர்மையாகக் கையாளப்பட வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பும் வேண்டுகோளும்.
SOURCE -விகடன்