வருகிற 2022ம் ஆண்டுக்கு பிறகு அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் முடங்க வாய்ப்பு : நிரப்பப்படாத 650 ஆசிரியர் பணியிடங்கள்

வருகிற 2022ம் ஆண்டுக்கு பிறகு அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் முடங்க வாய்ப்பு : நிரப்பப்படாத 650 ஆசிரியர் பணியிடங்கள்


தமிழகத்தில் அரசுப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவுகள் தொடர்ந்து முடக்கப்பட்டு வருவதால் திறன்படிப்புக்கான முக்கியத்துவம் குறைக்கப்படுவதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். தமிழகத்தில் 1978-79ம் கல்வி ஆண்டில் தொழிற்கல்வியை ஊக்குவிக்கும் பொருட்டு 709 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வொகேஷனல் குரூப் பாடப்பிரிவு என்ற தொழிற்கல்வி பாடப்பிரிவு கொண்டு வரப்பட்டது. அப்போது எலக்ட்ரிக்கல், டைப்ரைட்டிங், மின்னணு சாதனங்கள் என்று 66 வகையான தொழிற்கல்வி பாடங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. 



அப்போதைய சூழலில் 1.14 லட்சம் மேல்நிலை வகுப்பு மாணவர்களில் 24 ஆயிரம் பேர் வொகேஷனல் குரூப் என்ற தொழிற்கல்வி பாடப்பிரிவில் சேர்ந்தனர். இப்பிரிவுக்கு ஆரம்பத்தில் கிடைத்த அரசின் அக்கறை படிப்படியாக குறைய ஆரம்பித்தது. தொழிற்கல்விக்கான பாடநூல் தயாரிப்பு, தொழிற்கல்வி ஆசிரியர் நியமனம் என்ற பல்வேறு நிலைகளில் காட்டப்பட்ட சுணக்கம் அரசு மேல்நிலைப்பள்ளிகளில் வொகேஷனல் குரூப் என்ற தொழிற்கல்வி பிரிவை ஆட்டம் காண வைத்தது. 



இதனால் 2009-10ம் கல்வி ஆண்டில் பொது இயந்திரவியல், மின்இயந்திரங்களும், சாதனங்களும், மின்னணு சாதனங்கள், டிராப்ட்ஸ்மேன் சிவில், ஆடைகள் வடிவமைத்தல், தயாரித்தல், வேளாண் செயல்முறைகள், உணவு மேலாண்மையும், குழந்தைகள் வளர்ப்பும், நர்சிங், அலுவலக செகரட்டரியல், அக்கவுண்டன்சி அண்ட் ஆடிட்டிங், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, ஆட்டோமெக்கானிக் என்று 12 பாடங்களாக குறைந்தது. 



தற்போதைய நிலையில் 2,700 அரசு மேல்நிலைப்பள்ளிகளில் 1,605 பள்ளிகளில் மட்டுமே வொகேஷனல் குரூப் என்ற தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ளது. இதிலும் 650க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இவ்வாறு ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு அப்பள்ளிகளில் அப்படியே முடக்கப்பட்டுள்ளதுடன், மாணவர் சேர்க்கையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிலை தொடர்ந்து வருகிறது. 



இந்நிலையில், தற்போது பணிபுரியும் தொழிற்கல்வி ஆசிரியர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டவர்கள் அடுத்து வரும் 6 ஆண்டுகளில் அடுத்தடுத்து ஓய்வு பெற்று செல்லும் நிலையில் உள்ளனர். இவர்கள் அவ்வாறு ஓய்வு பெற்று செல்லும்போது அவர்கள் சம்பந்தப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு அப்படியே முடக்கப்படும் சூழ்நிலை உருவாகும். வேலூர் மாவட்டத்திலும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பள்ளிகளில் 90க்கும் மேற்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரிவு ஆசிரியர்கள் அடுத்தடுத்து ஓய்வு பெறும் நிலையில் உள்ளனர். 



இவர்கள் ஓய்வு பெறும் நிலையில் 2022க்குள் அந்தப்பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு கேள்விக்குறியாகலாம். இதுதொடர்பாக தொழிற்கல்வி ஆசிரியர் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் தரப்பில் கேட்டபோது, 'ஏட்டுப்படிப்புடன் தொழிற்படிப்புக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்ற அடிப்படையில் 1955ம் ஆண்டு பள்ளிகளில் பொதுக்கல்வி, தொழிற்கல்வி என இருமுனை கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. 



தொடர்ந்து 1978-79ம் ஆண்டு பள்ளிகளில் 'வொகேஷனல் குரூப்' என்ற பாடப்பிரிவு பிளஸ்1 வகுப்பில் அறிமுகப்படுத்தப்பட்டு 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்கல்வி ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அந்த நிலை தற்போது இல்லை. படிப்படியாக பள்ளிகளில் தொழிற்கல்வி பாடப்பிரிவு முடக்கப்பட்டு வருகிறது. இது சரியல்ல. 10ம் வகுப்பில் சுமாரான மதிப்பெண் பெறும் மாணவர்கள் பிளஸ் 2 வொகேஷனல் பிரிவில் சேர்ந்து தேர்ச்சி பெறும்போது பாடம் சார்ந்த டிப்ளமோ படிப்புகளில் 2ம் ஆண்டில் சேர்ந்து படிக்க முடியும். 



அதேபோல் பட்டப்படிப்பில் 2ம் ஆண்டில் சேர முடியும். அதற்கான வாய்ப்பை தட்டிப்பறிக்கக்கூடாது. அதோடு பிளஸ்1, பிளஸ்2 வகுப்புகளில் தொழிற்கல்வி பிரிவுக்கு புதிய பாடப்புத்தகங்கள் தயாரிக்கப்பட்டன. இப்புத்தகங்களும் 2022க்கு பிறகு என்சிஆர்டி மூலம் தொடங்கப்பட்ட பாடப்பிரிவுகளுக்கும் பயன்படுத்த முடியாமல் காலாவதியாகி விடும். என்சிஆர்டி மூலம் தமிழகத்தில் சோளிங்கர், ஆற்காடு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளிகள் உட்பட 67 பள்ளிகளில் 9ம் வகுப்பில் தொழிற்கல்வி பாடப்பிரிவு உள்ளது. தமிழக அரசு இந்த நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்' என்றனர்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive