அரசு ஊழியர்கள் 2வது திருமணம் செய்வதாக புகார் எழுந்தால், துறை ரீதியாக நடவடிக்கைஎடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
அதுமட்டுமல்லாமல், குற்ற வழக்கு பதிவது பற்றி பரிசீலிக்க வேண்டும் என்ற வழிகாட்டுதல்களை பிறப்பிக்க தமிழக நிர்வாகத்துறை செயலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.மதுரையை சேர்ந்த தேன்மொழி என்பவர் இது தொடர்பாக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில், அவருடைய கணவர் காவலராக பணியில் சேர்ந்து உதவி ஆய்வாளராக பணி ஓய்வு பெற்றவர். மேலும் தேன்மொழிக்கும் அவரது கணவருக்கும் 1982ம் ஆண்டு திருமணம் ஆனது. ஆனால், சில வருடங்கள் கழித்து, அவருக்கு ஏற்கனவே முத்துலட்சுமி என்பவரோடு திருமணம் நடந்தது தெரிய வந்தது.
மேலும் அவர்களுக்கு 3 குழந்தைகள் இருப்பதும் தெரிய வந்தது. இது தொடர்பாக உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்து பிறகு சமரச தீர்வு மையம் மூலமாக, இரு குடும்பத்தையும் கவனித்து கொள்வதாக அவரது கணவர் தெரிவித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, 2018ம் ஆண்டில் கணவரின் ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்கள் தமக்கு வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியிருந்தார். எனவே, கணவரின் ஓய்வூதியத்தில் இருந்து எனக்கு வழங்க வேண்டிய பங்கை தரக்கோரி மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு நீதிபதி சுப்ரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, பொது சேவைகளில் இருக்கும் அரசு ஊழியர்களிடையே இது போன்ற பிரச்சனைகள் அதிகம் இருப்பது தெரியவந்துள்ளது என நீதிபதி தெரிவித்தார். ஆனால், அந்த பிரச்சனைகள் பணியில் இருக்கும் போது தெரியவில்லை, ஓய்வு பெற்ற பிறகே தெரியவருகிறது என கூறிய நீதிபதி, இரு திருமணம் செய்வது நன்னடத்தை ஆகாது, சட்டப்படி குற்றம் எனக் கூறினார்.
பல அதிகாரிகள் இதனை கருத்தில் கொள்ளாமல் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்களை செய்கின்றனர். மேலும் இந்த வழக்கில், காவலரின் இரு திருமண பிரச்சனையை சமரச தீர்வு மையம் தீர்த்து வைத்தது அதிர்ச்சியாக உள்ளது என வேதனை தெரிவித்தார். தமிழக அரசின் ஓய்வூதிய விதிப்படி, ஓய்வூதியத்தை அரசு ஊழியர்கள் தனது மனைவிக்கு வழங்க பரிந்துரைக்கலாம். ஒரு மனைவிக்கு பரிந்துரை செய்தபின் மற்றொரு மனைவிக்கு மாற்றம் செய்ய இயலாது என தெரிவித்தார்.
இதையடுத்து, அரசு ஊழியர்கள்2வது திருமணம் செய்வதாக புகார் எழுந்தால்,துறை ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டார். அதேபோல், அரசு ஊழியர்கள் ஓய்வூதியம் பெறுவதற்கான வாரிசுகுறிப்பிடும் ஆவணத்தை அதிகாரிகள் முறையாகஆய்வு செய்யவும் ஆணை பிறப்பித்துள்ளார்