கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கான ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்வு

கூட்டுறவு சங்க விவசாயிகளுக்கான ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்வு

தமிழக சட்டசபையில் கூட்டுறவுத்துறை மானியக் கோரிக்கை மீது எம்.எல்.ஏ.க்கள் விவாதித்தனர். அதற்கு அந்தத் துறையின் அமைச்சர் செல்லூர் ராஜூ பதிலளித்தார். பின்னர் அவர் வெளியிட்ட புதிய அறிவிப்புகள் வருமாறு:-


தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கி மற்றும் மத்தியக் கூட்டுறவு வங்கிகளில் மைக்ரோ ஏ.டி.எம். எந்திரங்கள் நிறுவப்படும்.

கூட்டுறவு நிறுவனங்கள் மூலம் விவசாயிகளுக்கு வழங்கப்படும் தானிய ஈட்டுக்கடன் உச்சவரம்பு ரூ.3 லட்சத்திலிருந்து ரூ.10 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும். வேளாண் விளைப்பொருட்களை இருப்பு வைத்து லாபகரமான விலை கிடைக்கிறபோது, விற்று பயனடையும் நோக்கத்துடன், விவசாயிகளுக்கு தானிய ஈட்டுக்கடனின் உச்சவரம்பு உயர்த்தப்படுகிறது.

கூட்டுறவு சங்கங்களால் ஏற்கனவே வீட்டு வசதிக்கடன் ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தி வழங்கியதுபோல், தற்போது தனிநபர் நகை கடனளவு ரூ.10 லட்சத்திலிருந்து ரூ.20 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.27 கூட்டுறவு நிறுவனங்களின் அலுவலக கட்டிடங்கள் விரிவாக்கப்படும். 5 மத்திய கூட்டுறவு வங்கிகளில் 7 புதிய கிளைகள் தொடங்கப்படும். 61 கூட்டுறவு நிறுவனங்களில் பாதுகாப்பு அம்சங்கள் மேம்படுத்தப்படும்.

நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனைப் பண்டகசாலையில் அலுவலகக் கட்டிடம் கட்டும் பணி, ராமநாதபுரம் மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலையில் அலுவலக கட்டிடத்தை நவீனமயமாக்கும் பணி மற்றும் தூத்துக்குடியில் உள்ள மதுரா கோட்ஸ் தொழிலாளர் கூட்டுறவு பண்டகசாலையின் சுயசேவைப்பிரிவு கட்டிடத்தை நவீன மயமாக்கல், கணினி மயமாக்கல் மற்றும் விரிவாக்கம் செய்தல் ஆகிய பணிகள் மேற்கொள்ளப்படும்.

திருநெல்வேலி மற்றும் சிவகங்கை மாவட்ட நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலைகளில் பெட்ரோல் மற்றும் டீசல் வழங்கும் நிலையம் அமைக்கப்படும்.ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தின் ஏல மையத்தில் தானியங்கி நகரும் அமைப்புடன் கூடிய வேளாண் விளைபொருள் ஏல மையம் நவீனமயமாக்கப்படும்.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள கிருஷ்ணகிரி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கக் கிடங்கில் குளிர்பதன வசதி, வேளாண் விளைபொருள் உலர்களம் மற்றும் ஏலக்களம் அமைக்கப்படும்.திருச்சி மாவட்டம் துறையூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச்சங்கத்தில் வெங்காய அறுவடை எந்திரம், வெங்காய சேமிப்புத் தொட்டி மற்றும் வெங்காய கூழ் தயாரிக்கும் அலகு, சிறுதானியங்கள் பதனிடும் அலகு; சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கடலை எண்ணெய் பிழியும் அலகு ஆகியவை நிறுவப்படும்.

மதுரை மாவட்டம், பேரையூர் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் உளுந்தின் தோல் நீக்கி தரம் பிரிக்கும் அலகு நிறுவப்படும்.கடலூர் மாவட்டம் சிதம்பரம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் அப்பளம் தயாரிக்கும் அலகு, புதிய அலுவலகக் கட்டிடம் கட்டப்படும்.தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்தின் 3 மண்டல அலுவலகங்களுக்கு சுற்றுச்சுவருடன் கூடிய புதிய அலுவலகங்கள், மூன்று பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை மையங்கள் அமைக்கப்படும்.

திருவண்ணாமலை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய இடங்களில் மண்டல அலுவலகங்கள் கட்டப்படும். மேலும் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையம் சார்பாக திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் திண்டுக்கல் எரியோடு ஆகிய 3 இடங்களில் இந்தியன் ஆயில் நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும்.

சென்னை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் புதிய கூட்டுறவு மேலாண்மை பயிற்சி நிலையங்கள் தொடங்கப்படும். சேலம் மாவட்டம், சின்னக்கல்ராயன் பெரும்பல நோக்குக் கூட்டுறவுச் சங்கத்தில் வணிக வளாகம் கட்டப்படும்.இவ்வாறு அவர் அறிவித்தார்.





0 Comments:

Post a Comment

Recent Posts

Total Pageviews

Code

Blog Archive