பொதுப் பிரிவினருக்கான பி.இ. ஆன்லைன் கலந்தாய்வு விவரங்கள் வெளியீடு: ஜூலை 3 முதல் 28 வரை நான்கு சுற்றுகளாக நடைபெறுகிறது
ஜூலை 3 முதல் 28 வரை நான்கு சுற்றுகளாக நடைபெறுகிறது பொதுப் பிரிவினருக்கான பொறியியல் ஆன்லைன் கலந்தாய்வு விவரங்களை தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கெனவே அறிவித்தபடி ஜூலை 3-ஆம் தேதி தொடங்கி நான்கு சுற்றுகளாக ஜூலை 28-ஆம் தேதி வரை ஆன்லைன் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது. பொறியியல் கலந்தாய்வு ஜூன் 25-ஆம் தேதி தொடங்கியது. முதல் மூன்று நாள்கள் சிறப்புப் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு சென்னை தரமணியில் உள்ள மத்திய பாலிடெக்னிக் வளாகத்தில் நடைபெற்றது. அதோடு, பிளஸ்-2 தொழில் பிரிவு மாணவர்களுக்கான நேரடி கலந்தாய்வு ஜூலை 26-ஆம் தேதி தொடங்கி 28 வரை மூன்று நாள்கள் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து, பொதுப்பிரிவு மாணவர்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு ஜூலை 3-ஆம் தேதி தொடங்குகிறது.
இந்தக் கலந்தாய்வில் மாணவர்கள் வீட்டிலிருந்தபடியோ அல்லது தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 46 கலந்தாய்வு உதவி மையங்களுக்குச் சென்றோ அதில் பங்கேற்க முடியும். நான்கு சுற்றுகளாக...: ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்பட உள்ளது. முதல் சுற்றில் இடங்களைத் தேர்வு செய்ய ஜூலை 3 முதல் 10-ஆம் தேதி வரை மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இதில் தரவரிசை 1 முதல் 9,872 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இந்தச் சுற்று மாணவர்கள் ஜூலை 8 முதல் 10-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிட வேண்டும். அதன் பின்னர் முதல் சுற்று மாணவர்களுக்கான தற்காலிக ஒதுக்கீடு விவரம் ஜூலை 11-ஆம் தேதி வெளியிடப்படும். அதை ஜூலை 11,12 ஆகிய இரு தினங்களில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து இந்த மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஜூலை 13-ஆம் தேதி வெளியிடப்படும்.
ஜூலை 8 முதல் 12-ஆம் தேதி வரை நடைபெறும் இரண்டாம் சுற்று கலந்தாய்வில் தரவரிசை 9,873 முதல் 30,926 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஜூலை 13 முதல் 15-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிட வேண்டும். இவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு ஜூலை 16-இல் வெளியிடப்படும். அதை, ஜூலை 16, 17 தேதிகளில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஜூலை 18-ஆம் தேதி வெளியிடப்படும். மூன்றாம் சுற்று கலந்தாய்வு ஜூலை 13 முதல் 17 வரை நடைபெறும். இதில் தரவரிசை 30,927 முதல் 64,093 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். இவர்கள் ஜூலை 18 முதல் 20 -ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிட வேண்டும். இவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு ஜூலை 21-இல் வெளியிடப்படும். அதை ஜூலை 21, 22 தேதிகளில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு 23-ஆம் தேதி வெளியிடப்படும். 18 முதல் 22-ஆம் தேதி வரை நடைபெறும் நான்காம் சுற்று கலந்தாய்வில் தரவரிசை 64,094 முதல் 1,01,692 வரை உள்ள மாணவர்கள் அனுமதிக்கப்படுவர்.
இவர்கள் ஜூலை 23 முதல் 25-ஆம் தேதிக்குள் இடங்களைத் தேர்வு செய்துவிடவேண்டும். ஜூலை 26-இல் இவர்களுக்கான தற்காலிக இடஒதுக்கீடு வெளியிடப்படும். அதை 26, 27 தேதிகளில் மாணவர்கள் உறுதிப்படுத்த வேண்டும். அதனைத் தொடர்ந்து இவர்களுக்கான இறுதி ஒதுக்கீடு ஜூலை 28-இல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.