பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான ரூ.3.50 கோடி நிதியை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் – மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன்
மதுரை: சிகாகோவில் நடக்க உள்ள பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டிற்கான ரூ.3.50 கோடி நிதியை, தமிழக அரசு உடனே வழங்க வேண்டும் என மதுரை தொகுதி மார்க்சிஸ்ட் எம்பி சு.வெங்கடேசன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டி:மதுரை தொகுதி மற்றும் தென்மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். இதற்காக மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை இருமுறை சந்தித்து கோரிக்கை மனு கொடுத்துள்ளேன். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடம் கட்ட 3 ஆண்டுகளுக்கான நிதியை ஒதுக்குவதாக அமைச்சர் தெரிவித்தார். மதுரையில் இருந்து, சிவகங்கை அல்லது ராமநாதபுரம் ரோட்டில் மத்திய அரசு தொழிற்சாலையை அமைக்க வேண்டும்.
இதன்மூலம் 6 மாவட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மதுரை உள்ளிட்ட தென்மாவட்ட தொழில்வளர்ச்சிக்காக அனைத்து தென்மாவட்ட எம்பிக்கள் குழு விரைவில் மத்திய அமைச்சர்களை சந்தித்து கோரிக்கை வைக்க உள்ளோம். பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின், சிகாகோ நகரில் ஜூலை 4ம் தேதி துவங்குகிறது. இதில் 40 தமிழக கலைஞர்கள், 90 தமிழ் அறிஞர்கள் கலந்து கொள்கின்றனர். மாநாட்டிற்கு தேவையான ரூ.3.50 கோடி நிதியை தமிழக அரசு தருவதாக ஏற்கனவே அறிவித்திருந்தது. இதுவரை நிதி வழங்கப்படவில்லை. விழா நெருங்குவதால், தமிழக அரசு உடனே நிதியை வழங்க வேண்டும். என்றார்.
தமிழ்ச்சங்க மயில் ஆகுமா ‘தேஜஸ்?’
பேட்டியின் போது அவர் மேலும் கூறுகையில், ‘‘மதுரையில் இருந்து கோவை, திருப்பூர் வழியாக செல்ல போதுமான ரயில் வசதி இல்லை. இந்த மார்க்கத்தில் போதிய ரயில்கள் இயக்கவேண்டும். தமிழகத்திற்குள் செல்லும் அனைத்து ரயில்களுக்கும் வைகை, பாண்டியன், பொதிகை, கன்னியாகுமரி, நெல்லை என மரபு சார்ந்த பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் மதுரை – சென்னை இடையே அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விரைவு ரயிலுக்கு ‘தேஜஸ்’ என மத்திய அரசு பெயர் சூட்டியுள்ளது. அந்த பெயரை மாற்றி, ‘தமிழ்ச்சங்க மயில்’ என்ற பெயரை வைக்க வேண்டும்’’ என்றார்.