தமிழகத்தில் 46 சதவீத அரசு கலைக் கல்லூரிகளில் முழுநேர முதல்வர்கள் இல்லை
தமிழகத்தில் 46 சதவீத அரசு கலைக் கல்லூரிகளில் முழுநேர முதல்வர்கள் இல்லை என்ற அதிர்ச்சித் தகவல் வெளியகியுள்ளது.
தமிழகத்தில் கல்வியியல் கல்லூரிகள் உட்பட மொத்தம் 113 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் 46% கல்லூரிகளில் முழுநேர கல்லூரி முதல்வர்கள் இல்லை என்பது தெரியவந்துள்ளது. இந்த 52 கல்லூரிகளிலும் நியமிக்கப்பட்டுள்ள பொறுப்பு முதல்வர்கள், அன்றாட பணிகளில் மட்டுமே கவனம் செலுத்துவதால், கல்லூரியின் வளர்ச்சி மற்றும் தரம் உயர்த்தும் செயல்பாடுகள் கேள்விக்குறியாகியுள்ளன. கல்லூரிகளில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகளிலும், தற்காலிக முதல்வர்கள் தலையிடுவதில்லை என்றும் புகார் கூறப்படுகிறது.
இதே போல கல்லூரிக் கல்வி இயக்குனரகத்தின், இயக்குனர் பணியிடமும் காலியாக இருப்பதால், வளர்ச்சிப் பணிகள் பாதிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது. இது குறித்து பதிலளித்த உயர்கல்விதுறை செயலாளர் மங்கத் ராம் ஷர்மா, காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார்.