600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடம் காலி'
தமிழகத்தில், 600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்,'' என, தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தொழிற் கல்வி ஆசிரியர் கழக, மாநில பொதுச்செயலாளர் ஜனார்த்தனன் கூறினார். இது குறித்து அவர், நிருபர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில், 1978ல் புதிய கல்வி திட்டப்படி மேல்நிலை முதலாமாண்டு, இரண்டாம் ஆண்டில் பொதுக்கல்வி, தொழிற்கல்வி என, இரு வகையான கல்வி முறை நடைமுறை படுத்தப்பட்டது.
தமிழகத்திலுள்ள, 2,600 மேல்நிலைப்பள்ளிகளில், 1,605 பள்ளிகளில் மட்டும், தொழிற் கல்வி பாடப்பிரிவுகள் உள்ளன. இதில், 1.5 லட்சம் மாணவர்கள் படிக்கின்றனர். தொழிற் கல்வியை மேம்படுத்த தமிழக அரசால், 1980, 1982, 1985, 1993ம் ஆண்டுகளில் அமைக்கப்பட்ட உயர்மட்ட குழு, பல்வேறு பரிந்துரைகளை அளித்துள்ளது. மொத்த மாணவர்களில், 50 சதவீதம் பேர், தொழிற் கல்வி படிக்க வைக்க திட்டமிட வேண்டும் என, கூறப்பட்டுள்ளது. தொழிற் கல்வி பாடங்களை நடத்த, 4,324 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். ஆனால், 2007க்கு பிறகு, புதிய தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் உருவாக்கப்படவில்லை. பணி மூப்பு போன்ற காரணங்களினால், 600 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
மாணவர் நலனை கருத்தில் கொண்டு, காலியாக உள்ள, 600 தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இந்த கல்வியாண்டில் தரம் உயர்த்தப்பட உள்ள, 100 மேல்நிலைப் பள்ளிகளிலும், தலா இரண்டு தொழிற் கல்வி ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment