சட்டப்பேரவைக்கு நேரில் சென்ற அரசு பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள்
தமிழக சட்டப்பேரவையின் மானியக்கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. நாளையுடன் சட்டப்பேரவை முடிவடைகிறது. ஒவ்வொரு நாளும் சட்டப்பேரவை நிகழ்வுகளை நேரடியாக காண பல்வேறு அரசியல் கட்சியினரும், பொதுமக்களும், கல்லூரி, பள்ளி மாணவர்களும் ஆர்வமுடன் வருகின்றனர். நேற்று காலை சட்டப்பேரவை நிகழ்ச்சியை காண உத்திரமேரூர் தொகுதிக்கு உட்பட்ட மருதம் ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியை சேர்ந்த 44 மாணவ, மாணவிகள் மற்றும் 7 ஆசிரியர்கள் பேரவை வளாகத்திற்கு வந்தனர்.
அவர்களை உத்திரமேரூர் தொகுதி எம்.எல்.ஏ சுந்தர், நேரில் வரவேற்றார். பின்னர், சட்டப்பேரவை மாடத்திற்கு வரிசையாக சென்ற மாணவர்கள் சட்டப்பேரவை நிகழ்வுகளை கண்டுகளித்தனர். மேலும், முதல்வர், எதிர்கட்சி தலைவர், துணை முதல்வர், அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் கண்டதும், விவாதங்களை நேரடியாக பார்த்ததும் ஆச்சரியமாக இருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.