வேப்பூர் அரசுப்பள்ளியில் கொள்ளை
வேப்பூர்: வேப்பூர் அருகே அரசு பள்ளியில் மாணவிகளுக்கு வழங்க வைக்கப்பட்டிருந்த 22 ேலப்டாப்களை, காவலாளியை தாக்கி மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றுள்ளனர்.கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்துள்ள சேப்பாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் நல பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு மாணவிகளுக்கு வழங்குவதற்காக 179 லேப்டாப்களை அரசு அனுப்பியிருந்தது. இதில் கடந்த 2ம் தேதி முதல் சுமார் 140 லேப்டாப்கள் மாணவிகளுக்கு வழங்கப்பட்ட நிலையில் மீதமிருந்த 39 லேப்டாப்களை பள்ளியின் ஒரு அறையில் பாதுகாப்பாக வைத்து பூட்டியிருந்தனர். இப்பள்ளிக்கு நிரந்தர காவலாளி இல்லாததால் தற்காலிகமாக சேப்பாக்கத்தை சேர்ந்த கலியன் (55) என்பவரை காவலாளியாக பள்ளி நிர்வாகம் நியமனம் செய்தது.
கடந்த 12ம் தேதி இரவு முதல் அவர் காவல் பணியில் ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் அன்று நள்ளிரவு 1.30 மணியளவில் முகமூடி அணிந்து வந்த 4 மர்ம நபர்கள், கலியனை சரமாரியாக தாக்கியுள்ளனர். ஒருவன் கலியனின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டிக்கொண்டிருந்த நிலையில் மற்ற 3 பேரும் அறையின் பூட்டை உடைத்து உள்ளே இருந்த 22 லேப்டாப்களை எடுத்துக்கொண்டு, தப்பியோடிவிட்டனர். பெட்டிகளை அங்கேயே வீசிவிட்டு சாக்கு பையில் லேப்டாப்களை எடுத்துச் சென்றுள்ளனர். தலைமையாசிரியர் தேவசேனா புகாரின்படி வேப்பூர் போலீசார் வழக்குப்பதிந்து லேப்டாப்களை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடிவருகின்றனர்.
0 Comments:
Post a Comment