உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் அரசு பள்ளிகளுக்கு மாற்றம்
தனியார் அரசு உதவி பெறும் பள்ளிகளில், உபரியாக உள்ள 45 ஆசிரியர்களுக்கு, கடலுாரில் நடந்த திடீர் கலந்தாய்வு மூலம் பணிமாறுதல் வழங்கப்பட்டது.பள்ளி ஆசிரியர்களுக்கு ஆண்டுதோறும் கவுன்சிலிங் மூலம் விரும்பிய இடங்களுக்கு பணி மாறுதல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள், தலைமையாசிரியர்கள் மாநில அளவிலான சீனியாரிட்டி கடைபிடிக்க வேண்டியிருக்கிறது.
இதற்கிடையே வேலுார் லோக்சபா தொகுதியில் நடைபெறும் இடைத்தேர்தலை முன்னிட்டு, இவ்விரு பிரிவு ஆசிரியர்களுக்கு கவுன்சிலிங் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. மற்ற ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங் நடந்ததில், பாதிக்கப்பட்ட ஒரு இடைநிலை ஆசிரியர் சென்னை ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றுள்ளார். அதைதொடர்ந்து ஆசிரியர்களின் கவுன்சிலிங் நடத்துவது நிறுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், அரசு பள்ளிகளில் ஏற்பட்டுள்ள ஆசிரியர்கள் பற்றாக்குறையை போக்க, அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள உபரி ஆசிரியர்களை, அரசு பள்ளிகளுக்கு பணிமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
கடலுாரில் கடந்த 24ம் தேதி நடந்த திடீர் கலந்தாய்வில் முதுநகரில் உள்ள 4 அரசு உதவி பெறும் பள்ளி, புதுநகரில் 3 அரசு உதவி பெறும் பள்ளி ஆகியவற்றில் கூடுதலாக இருந்த 45 ஆசிரியர்கள், கவுன்சிலிங் மூலம், அவர்கள் விரும்பிய இடத்திற்கு பணி மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் நாளை 29ம் தேதி அரசு பள்ளிகளில் பொறுப்பேற்கின்றனர்