வாசிப்பு பழக்கம் குற்றங்களை குறைக்கும்
கோவை மாவட்ட நுாலகத்துறை சார்பில், புத்தக வாசிப்பு குறித்து விழிப்புணர்வு பிரசாரம் நடக்கிறது.
இதன் ஒரு பகுதியாக, குறிச்சி அரசு மேல் நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்களுக்கு, வாசிப்பு பழக்கம் குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது. 134 மாணவர்கள் பங்கேற்று, நுால்கள் மற்றும் செய்தி தாள்கள் வாசித்தனர்.
திட்ட ஒருங்கிணைப்பாளர் கோவைப்புதுார் கிளை நுாலக நுாலகர் விஜயன் பேசுகையில், ''மாணவர்களிடம் நல்ல சிந்தனை வளர வேண்டும் என்றால், சிறந்த நுால்களை வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்தி கொள்ள வேண்டும்.
உலக நடப்புகளை அறிந்து கொள்ள, தினமும் தவறாமல் செய்தி தாள்களை வாசிக்க வேண்டும்.
பொது அறிவு வளர, பாடப்புத்தகங்களோடு, பிற அறிவு சார்ந்த நுால்களையும் படிக்க வேண்டும். புத்தக வாசிப்பு பழக்கம் வளர்ந்தால், நாட்டில் குற்றங்கள் குறையும்,'' என்றார்.
பள்ளியின் தலைமையாசிரியை சாந்தி, நஞ்சுண்டாபுரம் கிளை நுாலகர் சசீந்தரன், செல்வராஜ் மற்றும் ஆசிரியர்கள் பங்கேற்றனர்