அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி: மயில்சாமி அண்ணாதுரை
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம் என்றார் இஸ்ரோ விஞ்ஞானியும், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றத்தின் துணைத் தலைவருமான மயில்சாமி அண்ணாதுரை.
பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், செய்தியாளர்களிடம் மேலும் கூறியது:
வானிலை அறிக்கையை முன்கூட்டியே அறிவித்தாலும் அவற்றில் மாறுபாடு நிகழ்வதும், அறிவிப்பு பொய்த்துப்போவதும் உண்டு. இயற்கை எப்போதும் அட்டவணைப்படி இயங்காது. அது தன்போக்குக்கு செயல்படும். அதனால்தான் வானிலை அறிவிப்பு அவ்வப்போது மாறிப்போவது நிகழ்கிறது.
இயற்கை நம்மை வஞ்சித்தாலும், அதை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும். நீர் மேலாண்மை திட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். குறைந்த அளவு தண்ணீரைக் கொண்டு, அதிக மகசூல் பெறும் விவசாய நீர் மேலாண்மைத் திட்டங்களைப் பின்பற்ற வேண்டும்.
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மன்றம் சார்பில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு செயற்கைக்கோளை விண்ணில் செலுத்தும் பயிற்சி அளிக்கத் திட்டமிட்டுள்ளோம். ஆகஸ்ட் 11-ஆம் தேதி முதல்கட்டமாக இப்பயிற்சி தொடங்க உள்ளது.
மாணவர்களால் தயாரிக்கப்பட்ட சிறிய அளவிலான செயற்கைக்கோளை, ராட்சத பலூன் மூலம் சுமார் 15 கி.மீ உயரத்துக்கு விண்ணில் செலுத்தியும், செயற்கைக்கோள் செயல்பாட்டையும், அது அனுப்பும் படம் மற்றும் சமிக்ஞைகளை தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறையிலிருந்து கண்காணிக்கவும் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்.
இந்த பயிற்சியின் மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் நிஜமான விண்வெளி திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட உத்வேகம் கிடைக்கும் என்றார்.