பணியிட மாற்ற விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்; தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை
பணியிட மாற்ற விவரங்களை இணையதளத்தில் வெளியிட வேண்டும்; கலந்தாய்வு விதிகளில் திருத்தம் தேவை:
தமிழக அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை நீதிமன்ற உத்தரவின்படி பணியிடமாற்ற விவரங்களை இணைய தளத்தில் வெளியிட்டு வெளிப் படைத்தன்மையுடன் கலந்தாய்வை நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆசிரியர் இடமாறுதல் கலந்தாய்வு இணையதளம் மூலம் ஜூலை 8 முதல் 15-ம் தேதி வரை 5 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதற்கான வழிகாட்டுதல்கள் அறிவிப்பில், ''குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் ஒரே பள்ளியில் பணிபுரிந்தவர்களுக்கு மட்டுமே இடமாறுதல் தரப்படும்.
ஒரு பணி தொகுப்பில் 100 காலியிடங்கள் இருந்தால் மட்டும் இடமாறுதல் அளிக்கப்படும். அரசுப்பள்ளிகளில் உள்ள 19,426 உபரிஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்படுவார்கள்' என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. இந்த கலந்தாய்வு விதிகளை தளர்த்தி, உயர் நீதிமன்ற உத்தரவின்படி பணியிட மாற்ற விவரங்களை இணையதளத்தில் வெளியிட ஆசிரியர்கள் கோரியுள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு பட்டதாரிஆசிரியர் கூட்டமைப்பு பொதுச் செயலாளர் பி.பேட்ரிக் ரெய்மாண்ட் கூறும்போது, "முன்பு ஓராண்டு பணி முடித்தவர்களுக்கும் மாறுதல்வழங்கும் வாய்ப்பு நடைமுறையில் இருந்தது. இப்போது அது 3 ஆண்டாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதன்மூலம் பலர் 3 ஆண்டுகள் மாவட்டம் விட்டு மாவட்டம் தொலைவில் சென்று பணிபுரிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்த விதிகளில் நிர்வாக மாறுதலை எப்போது வேண்டுமானாலும் செய்யலாம் என்பதை ஏற்க முடியாது. இவை அதிகாரிகளால் பழிவாங்கும் விதமாகவும், வியாபார நோக்கிலும் கையாளப்படும் அபாயம் உள்ளது. உயர்நிலை பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி 6, 7, 8-ம் வகுப்புகளுக்கு தலா ஒரு ஆசிரியர் வீதம் 3 பணியிடங்களும், 9, 10-ம்வகுப்புகளில் பாடத்துக்கு ஒரு ஆசிரியர் வீதம் 8 பணியிடங்களும் அனுமதிக்கப்பட்டன. ஆனால், 3 ஆசிரியர் பணியிடங்களை கல்வித்துறை குறைத்துவிட்டது.
இதனால் உயர்நிலை பள்ளிகளில் 5 ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால் ஒருவர் வாரத்துக்கு 40 பாடவேளைகள் நடத்த வேண்டும். இந்த பணிச்சுமை ஆசிரியர்களுக்கு மனஉளைச்சலை தருவதுடன், கல்வித்தரமும் குறையும் சூழல் உள்ளது. எனவே, கட்டாய கல்வி உரிமை சட்டப்படி ஏற்கெனவே வழங்கிய 8 பணியிடங்களை அரசு அளிக்க வேண்டும் ''என்றார். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட் கூறும்போது, ''கலந்தாய்வு மே மாதம்நடைபெற்றால் அரசின் ஆணைப்படி 3 ஆண்டுகளில் மாறுதல் பெறமுடியும் ஆனால், தாமதமாக கலந்தாய்வு நடத்துவதால் 4 ஆண்டுகளுக்கு பின்னரே மாறுதலில் பங்கேற்க முடியும். இந்த நடைமுறை யால் பெரும்பாலானவர்கள் கலந்தாய்வில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்ற 4ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர்களுக்கு 17பி நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. இதை திரும்ப பெற்றால் மட்டுமே அவர்கள் மாறுதல் பெற முடியும். இல்லையெனில் அவர்கள் 3 ஆண்டுகள் பதவிஉயர்வு, இடமாறுதல் கலந்தாய்வில் பங்கேற்க முடியாது என்பதால் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். எனவே, விதிகளில் திருத்தங்களை செய்து வெளிப்படைத்தன் மையுடன் கலந்தாய்வு நடைபெற வேண்டும்.
அதற்கு உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணியிட விவரங் களை மாவட்டவாரியாக இணைய தளத்தில் அரசு வெளியிட வேண் டும்' என்றார். தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச்செயலாளர் இரா.தாஸ் கூறும்போது, ''கலந்தாய்வில் பணிநிரவல் முதலில் நடைபெற்றால் மாவட்ட மாறுதல் மற்றும் மாவட்டம் விட்டு மாவட்டம் கலந்தாய்வு நடைபெறாது.
எனவே,பணிநிரவலை ரத்து செய்துவிட்டு கலந்தாய்வு நடத்த வேண்டும். மேலும், ஓராண்டு பணிபுரிந்தாலே மாறுதலில் கலந்துக் கொள்ளவும் வழிசெய்ய வேண்டும். தென்மாவட்டங்களில் பரவலாக எல்லா பாடங்களுக்கும் உபரி ஆசிரியர்கள் உள்ளபோது நிர்வாக மாறுதலுக்கு மட்டும் காலியிடம் எப்படி வருகிறது என்பதை அரசு தெரிவிக்க வேண்டும்''என்றார்