முழு நேரக் கல்லூரிகளில் முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவிப் போராசிரியர்களாக நியமிக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு
முழு நேரக் கல்லூரிகளில் முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவிப் போராசிரியர்களாக நியமிக்க வேண்டும்: மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவு - Click Here to Read Source News
-கி.மகாராஜன்
பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி, அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவருக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் அரசு கலைக்கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்தில் பல்கலைக்கழக மானியக்குழு 2009-ல் வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்றக்கோரி பி.ராஜேஷ், எஸ்.ஜெஸ்லின் பிரிசில்டா ஆகியோர் உயர் நீதிமன்ற கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியன், "ஆசிரியர் பணி என்பது உயர்வான பணியாகும். வகுப்பறைகளில் கற்பிப்பது ஒரு திறமையாகும். ஒரு ஆசிரியர், வகுப்பறை கலையை கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும். இதனால் முழு நேரக் கல்லூரிகளில் முறையாக கல்வி கற்றவர்களை மட்டுமே உதவிப் போராசிரியர்களாக நியமிக்க வேண்டும். கல்லூரிகளுக்கு செல்லாமல் திறந்த வெளி பல்கலைக்கழகம், தொலை நிலைக்கல்வியில் பட்டம் பெற்றவர்கள் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி உதவி பேராசிரியர்களாக நியமிக்க தகுதியற்றவர்கள்.
இதனால் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி அரசு கல்லூரி உதவிப் பேராசிரியர் நியமனத்தை மேற்கொள்ள தமிழக உயர் கல்வித்துறை செயலர், ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் ஆகியோர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதை மீறும் அதிகாரிகள் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகத்தில் அரசு உதவிப் பேராசிரியர் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி நடைபெறுவதை மாநில அரசு உறுதிப்படுத்த வேண்டும்" இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.