அரசுப்பள்ளி ஆசிரியர்களை பாராட்டிய அமைச்சர்
புதுக்கோட்டை மாவட்டத்தில் அரசுபள்ளிகளில் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்றமுதல் அரசுப்பள்ளியான கவரப்பட்டிஅரசு மேல் நிலைப் பள்ளிக்கு
அமைச்சர் விஜயபாஸ்கர் பாராட்டு
புதுக்கோட்டை,ஜீலை.23: புதுக்கோட்டை மாவட்டத்தில் முதலாவது ஐ.எஸ்.ஓ தரச்சான்று பெற்ற கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி தலைமைஆசிரியர் மற்றும் ஆசிரியர்களை மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை அமைச்சர் டாக்டர்.சி.விஜயபாஸ்கர் நேரில் சென்று பாராட்டினார்.
சர்வதேச அளவில் பல்வேறு நிறுவனங்களின் மூலம் ஐ.எஸ்.ஓ தரச்சான்று வழங்கபட்டு வருகிறது. அந்த வகையில் டெல்லியில் உள்ள ஆம்பிஷன் அசெஸ்மென்ட் நிறுவனத்தினர் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை ஒன்றியம் கவரப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியின் மாணவர்சேர்க்கை,வருகைப்பதிவு,கல்வி பயிற்றுவித்தல் ஆகியவற்றில் கையாளும் முறைகளை கண்காணித்தனர்.பின்னர் தினசரிகால அட்டவணை,தேர்விற்கு தயார் செய்யும் விதம்,விடைத்தாள் திருத்தும் விதம்,தேர்ச்சி விகிதம் குறித்தும் ஆய்வு செய்தனர்.பின்னர் பள்ளியின் சுகாதாரம்,கட்டிட உறுதித்தன்மை ,ஆய்வகங்களின் உட்கட்டமைப்பு வசதிகள்,சுற்றுச் சூழல் அமைப்பு ,தூய்மை பராமரிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை ஆய்வு செய்தனர்.
ஆய்வின் முடிவில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரெண்டாம் வகுப்பு வரை சிறந்த கல்வி அளித்தமையை பாராட்டியும்,மாணவர்களின் நல்லொழுக்கம்,பணிவு,படைப்பாற்றல்,பொது அறிவுத்திறன் ஆகியவற்றை பாராட்டியும் டெல்லியில் உள்ள ஆம்பிஷன் அசெஸ்மென்ட் நிறுவனத்தின் சார்பில் ஐ.எஸ்.ஓ தரச்சான்று பள்ளிக்கு வழங்கப்பட்டது.அதனை அறிந்த மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் பள்ளிக்கு நேரில் சென்று தலைமையாசிரியர் ,ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை பாராட்டினார்.
பின்னர் பள்ளியில் புதிதாக தொடுதிரை வசதி கொண்ட ஸ்மார்ட் வகுப்பறையை திறந்து வைத்தார்.அதனையடுத்து 2019- 2020 ஆம் கல்வி ஆண்டில் பயிலும் பிளஸ் 1,பிளஸ் 2 மாணவர்களுக்கும்,2018-2019 கல்வி ஆண்டில் பிளஸ் 2 பயின்ற மாணவர்களுக்கும் ரூ.49 இலட்சத்து நாற்பத்து நான்காயிரத்து அறுநூறு மதிப்பிலான 402 மதிப்பிலான விலையில்லா மடிக்கணினிகளை மாணவ – மாணவிகளுக்கு வழங்கினார்.
முன்னதாக பள்ளி மாணவ,மாணவியர்களின் சார்பில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.கலைநிகழ்ச்சியை பாராட்டி ரூ.5 ஆயிரமும் ,நன்றாக உரை நிகழ்த்திய ஒன்பதாம் வகுப்பு மாணவி ஸ்ரீதேவியை பாராட்டி ரூ.5 ஆயிரமும் அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கிப் பாராட்டினார்.
நிகழ்வின் போது மாவட்ட ஆட்சித்தலைவர் பி.உமாமகேஸ்வரி,மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் ( பொறுப்பு) செ.சாந்தி,இலுப்பூர் மாவட்டக்கல்வி அலுவலர் ( பொறுப்பு) எஸ்.இராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இறுதியாக பள்ளியின் தலைமையாசிரியர் இரா.சிவகுமார் நன்றி கூறினார்.