பள்ளிகளில் அமலுக்கு வராத சிறப்பாசிரியர் பாடத்திட்டம்...
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின்
தனித்திறமைகளை வெளி கொண்டு வரும் பொருட்டு சிறப்பாசிரியர்கள் நியமிக்கபட்டனர். இவர்கள் ஓவியம், தையல், இசை உள்ளிட்ட பாடங்களை மாணவர்களுக்கு கற்பித்து வருகின்றனர்.
இந்த பாடங்களுக்கென தனியாக பாடத்திட்டங்கள் இல்லாத காரணத்தால் ஆசிரியர்கள் தங்களுக்கு தெரிந்ததையும், மாணவர்களுக்கு கற்றுக்கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் பாட இணை செயல்பாடுகளுக்கு பிரத்யேக பாட திட்டத்தை தயாரிக்க வேண்டும் என்று சிறப்பாசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். அதன்படி, ஆசிரியர்கள் உள்ளடங்கிய கமிட்டி அமைக்கப்பட்டு கடந்த 2017ம் ஆண்டு நவம்பர் மாதம் பாடத்திட்டம் தயாரிக்கப்பட்டது.
இதில், பல்வேறு மாணவர்களின் திறனை வளர்க்கும் விதமான அம்சங்கள் இடம்பெற்றிருந்தன. பாடத்திட்டத்தை அப்போதே பள்ளிக்கல்வித்துறை இணையதளத்தில் வெளியிட்டது. மேலும், அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களும் இதனை அமல்படுத்த வேண்டும் என்று கூறியிருந்தது. ஆனால், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட பாடத்திட்டம் இன்று வரையில் அமலுக்கு வராமலேயே உள்ளது. இதனால், மாணவர்கள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்ள முடியாமல் உள்ளதாக ஆசிரியர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து சிறப்பாசிரியர்கள் கூறுகையில், ‘‘புதிய பாடத்திட்டத்தை நடைமுறைப்படுத்த அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுப்பதில்லை. இதனால், தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு பள்ளிகளிலும் ஒவ்வொரு மாதிரியாக பாட இணைசெயல்பாடுகள் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகிறது. மாணவர்களின் கற்றல் திறனும் பின்தங்கியே உள்ளது. இதனை முறைப்படுத்தும் பொருட்டு 2017ல் தயாரிக்கப்பட்ட பாடத்திட்டத்தை நடைமுறைபடுத்துவது அவசியம்.’’ என்றனர்.