ஆசிரியர்கள் மீது சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவு
பள்ளிகளில் ஆசிரியர் பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் படிக்காதவர்கள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், பிற மொழிகளில் படித்த ஆசிரியர்கள் பலர், பணியில் சேர்ந்துள்ளனர்.
இவர்கள், பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் மொழிக்கான கட்டாய தேர்வை எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற, நிபந்தனையுடன் பணி வழங்கப்பட்டது.
ஆனால், நுாற்றுக்கணக்கான ஆசிரியர்கள், இந்த தேர்வில் தேர்ச்சி பெறாமல், தமிழ் தேர்வில் இருந்து விலக்கு கேட்டு, பள்ளி கல்வித் துறைக்கு, மனுக்கள் அனுப்பியுள்ளன
இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும், பள்ளி கல்வி பணியாளர் பிரிவு இணை இயக்குனர், நாகராஜமுருகன், சுற்றறிக்கை அனுப்பிஉள்ளார்.
அதில், சட்டத்தை பின்பற்றி பணியில் சேர்ந்து, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ் தேர்வை முடிக்காதவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை விபரங்களை, அறிக்கையாக சமர்ப்பிக்க உத்தரவிட்டுள்ளார்.மேலும், தமிழ் தேர்வை முடிக்காதவர்கள் மீது, நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தியுள்ளார்.
இதையடுத்து, முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள் வழியே, அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
அரசின் பணி நிபந்தனை விதிகளின் படி, தமிழ் மொழி படிக்காத ஆசிரியர்கள் மீது, சஸ்பெண்ட் உள்ளிட்ட நடவடிக்கைகள் வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது.