மாநகராட்சி, கள்ளர் பள்ளி ஆசிரியர்களுக்கும் மடிக்கணினி: தமிழ்நாடு கணினி ஆசிரியர் சங்கம் வலியுறுத்தல்
அனைத்து ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கவேண்டும் என்று, கணினி ஆசிரியர் சங்கம் அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. தமிழகத்தில் பள்ளி கல்வித் துறையின் கீழ் இயங்கும் அரசுப் பள்ளி முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்காக, தமிழ்நாடு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளி கணினி ஆசிரியர்கள் சங்கம் வரவேற்பை தெரிவித்துள்ளது.
அதே நேரம், மாநகராட்சிப் பள்ளிகள், கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்பட வேண்டும். தமிழகத்தில் அரசுப் பள்ளிகளை விட, மாநகராட்சி, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளன.
எனவே, இது அரசுக்கு பெரும் சுமையாகவும் இருக்காது. அரசுப் பள்ளி ஆசிரியர்கள் அனைவருக்கும் விலையில்லா மடிக்கணினி வழங்கப்படும் என்று அரசு அறிவித்தபோது, மாநகராட்சி, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் நலத் துறை ஆசிரியர்களும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர்.
இந்நிலையில், இவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாது என்ற அரசின் அறிவிப்பு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே, தமிழக அரசு அனைத்து வகையான அரசு, மாநகராட்சி, கள்ளர் மற்றும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் முதுகலை ஆசிரியர்கள் அனைவருக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும் என்று, கணினி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.