பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு முதல் சுற்று நாளை தொடக்கம்:
தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஏற்பாடு பொறியியல் படிப்புக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை (3-ம்தேதி) தொடங்குகிறது. இக்கலந்தாய்வை 4 சுற்றுகளாக நடத்த தொழில்நுட்பக்கல்வி இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர 1 லட்சத்து 33 ஆயிரம் மாணவ-மாணவிகள் விண்ணப்பித்தனர்.
அவர்களில் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்து 1 லட்சத்து 4 ஆயிரம் பேர் கலந்தாய்வுக்கு தகுதி பெற்றனர். இந்த ஆண்டு பொறியியல் மாணவர் சேர்க்கை பணிகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மேற்கொண்டுள்ளது. சிறப்புபிரிவினருக்கும், தொழிற்கல்விபிரிவினருக்கும் நேரடி கலந்தாய்வும் பொதுப்பிரிவினருக்கு கடந்த ஆண்டைப் போல் ஆன்லைன் கலந்தாய்வும் நடத்த முடிவுசெய்தது. அதன்படி, முதல்கட்டமாக சிறப்பு பிரிவினர், தொழிற் கல்விபிரிவினருக்கு நேரடி கலந்தாய்வு நடத்தப்பட்டு கல்லூரி ஒதுக்கீட்டு ஆணை வழங்கப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவேஅறிவிக்கப்பட்டபடி, பொதுப்பிரிவினருக்கான ஆன்லைன் கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதற்கான அட்டவணையை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் இணையதளத்தில் (www.tneaonline.in) வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆன்லைன் கலந்தாய்வு 4 சுற்றுகளாக நடத்தப்படுகிறது. முதல் சுற்றுக்கு கட்-ஆஃப் மதிப்பெண் 200 முதல் 178 வரைஉள்ள 9,872 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதைத்தொடர்ந்து கட்-ஆஃப் மதிப்பெண் வாரியாகஅடுத்தடுத்து மொத்தம் 4 சுற்றுகள் நடத்தப்படும். ஆன்லைன் கலந்தாய்வில் ஒவ்வொரு சுற்றிலும் பங்கேற்கும் மாணவர்களுக்கு அதுதொடர்பாக குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் மூலமாக தகவல் அனுப்பப்படும்.
மேலும் அவர்களும் இணையதளத்தில் லாக்-இன் செய்து கலந்தாய்வு தொடர்பான விவரங்களை அறிந்துகொள்ளலாம். இத்தகவலை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலாளர் டி.புருஷோத்தமன் தெரிவித்தார்.