கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம்; ஆசிரியர் கூட்டணி தலைவர் கோரிக்கை
சிவகங்கை: 'அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பாதிக்கும் கல்வி பெறும் உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும்,' என தமிழக தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைவர் ஏ.ஜோசப் சேவியர் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:ஆண்டுதோறும் 25 சதவீத ஏழை மாணவர்களை தனியார் பள்ளிகளில் சேர்த்து கல்வி கட்டணத்தை அரசே செலுத்தும் கல்வி பெறும் உரிமை சட்டத்தில் (ஆர்.டி.இ.,) திருத்தம் கொண்டு வர வேண்டும். இச்சட்டம் மூலம் நடப்பு ஆண்டில் 1.25 லட்சம் மாணவர்கள் தனியார் பள்ளியில் சேர்க்கப்பட்டு கட்டணமாக 130 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.
அரசின் செயலால் அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து மூடுவிழா காணும் நிலை உருவாகும்.இச்சட்டம் மாணவர்களின் நலனுக்காக கொண்டு வந்ததுதான். ஆனால் அச்சட்டத்தில் கூறியபடி பள்ளிகளில் மாணவர்களுக்கு சுத்திகரித்த குடிநீர், நவீன கழிப்பறை வசதிகளை செய்து தராதது ஏன்? கிராமப்புற பள்ளிகளில் அடிப்படை வசதிகள் கிடைக்காமல் மாணவர்கள் தவிக்கின்றனர்.200 மாணவருக்கு 6 ஆசிரியர் வளர்ந்த நாடுகளில் அரசுப்பள்ளிகளில் 10:1 என்ற விகிதாச்சாரப்படி ஆசிரியர்களை நியமித்துள்ளனர்.அங்கு அதிகபட்சம் 200 மாணவர்களுக்கு 20 ஆசிரியர்கள் வரை நியமிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழ்நாட்டில் 200 மாணவர்களுக்கு ஆறு ஆசிரியர்களை மட்டுமே ஒதுக்கி அரசுப்பள்ளிகளுக்கு மூடுவிழா காண அரசே ஏற்பாடு செய்து வருகிறது.
அரசுக்கு அழுத்தம் ஆண்டுதோறும் தனியார் பள்ளிகளுக்கு ஒதுக்கும் நிதியில் அரசுப்பள்ளிகளுக்கு அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தால் மாணவர் சேர்க்கை உயரும்.எனவே அரசுப்பள்ளிகளை பாதிக்காத வகையில் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என அகில இந்திய ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை வைத்துள்ளன. &'ஜாக்டோ ஜியோ&' கூட்டமைப்பு சார்பிலும் அரசுக்கு அழுத்தம் தருகிறோம், என்றார்.