ஆசிரியர்கள் மாணவர்களிடம் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்: புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன் பேச்சு
புதுக்கோட்டை,ஜீலை.19: ஆசிரியர்கள் மாணவர்களிடம் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும் என புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன் பேசினார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 10 ஆம் வகுப்பு கற்பிக்கும் அனைத்துப் பட்டதாரி ஆசிரியர்களுக்கான புதிய பாடநூல் சார்ந்த பயிற்சி ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தின் சார்பில் லேனா விலக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்றது.
பயிற்சியினை தொடங்கி வைத்து புதுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் எஸ்.ராகவன் பேசியதாவது: ஆசிரியர்கள் தமக்கு தெரிந்தவற்றை மாணவர்களிடம் கற்பிக்கும் பொழுது எளிமையாக்கி கற்பிக்க வேண்டும்.மாணவர்களிடம் நல்ல அணுகுமுறையை வளர்த்து கருத்துக்களை முன்மொழிய வேண்டும்.ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் செல்லும் பொழுது இன்றைய காலத்திற்கேற்ப தகவல்களை சேகரித்து செல்ல வேண்டும்.குறிப்பாக கணினி அறிவை ஆசிரியர்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.செய்யுள் பகுதியை இசையோடு,ராகத்தோடு கற்றுக் கொடுக்க வேண்டும்.
மாணவர்களின் வாசிப்புத் திறனை மேம்படுத்த தனிப்பயிற்சி அளிக்க வேண்டும்.மாணவர்களிடம் சுயகற்றலை ஊக்குவிக்க வேண்டும்.ஆசிரியர்கள் இங்கு எடுக்கும் பயிற்சியை மாணவர்களிடம் நல்லமுறையில் கொண்டு சேர்க்க வேண்டும்.அப்பொழுது தான் பயிற்சியின் நோக்கம் நிறைவேறும்.மேலும் மாணவர்களிடம் ஆசிரியர்கள் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்.தேர்ச்சி சதவீதத்தில் கடந்த ஆண்டை விட முன்னேறி உள்ளோம்.அதற்காக உழைத்த ஆசிரியர்களாகிய உங்களுக்கு எனது பாராட்டுக்கள் என்றார்.
பயிற்சியில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி மாவட்ட உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் பழனிவேல்,பள்ளிதுணை ஆய்வாளர் ஜெயராமன் ஆகியோர்கள் கருத்துரை வழங்கினார்கள் .
பயிற்சிக்கான ஏற்பாடுகள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் செ.சாந்தி( பொறுப்பு) வழிகாட்டுதலின் படி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா,பாலகிருஷ்ணன் ஆகியோர்கள் செய்திருந்தார்கள்.
பயிற்சியானது புதுக்கோட்டை,இலுப்பூர் கல்வி மாவட்ட ஆசிரியர் களுக்கு மவுண்ட் சீயோன் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியிலும்,அறந்தாங்கி கல்வி மாவட்ட ஆசிரியர்களுக்கு வெங்கடேஸ்வரா கல்வியியல் கல்லூரியில் வைத்து நடைபெறும்.
இரண்டு கட்டமாக நடைபெறும் தமிழ் பாடத்திற்கு 262 ஆசிரியர்களும்,ஆங்கில பாடத்திற்கு 210 ஆசிரியர்களும்,சமூக அறிவியல் பாடத்திற்கு 262 ஆசிரியர்களும் நான்கு கட்டமாக நடைபெறும் கணித பாடத்திற்கு 434 ஆசிரியர்களும்,அறிவியல் பாடத்திற்கு 475 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.பயிற்சியானது ஆகஸ்ட் 1 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
பயிற்சியின் கருத்தாளர்களாக மாநில அளவில் பயிற்சி பெற்ற கருத்தாளர்கள் இளங்கோவன்,கும.திருப்பதி,மகா.சுந்தர்,சந்தன ஆரோக்கியநாதன்,கஸ்தூரிரெங்கன்,லதா,கௌசல்யா,மலையப்பன் ,சரவணப்பெருமாள்,முருகன்,சந்திரசேகர்,பாலசுப்பிரமணியபிள்ளை,பூமிநாதன்,கோவிந்தராஜன்,பாலசுப்ரமணியன்,செந்தில்குமார்,வசந்தகுமார்,விஜயரகுநாதன்,நாகராஜ்,பாண்டியராஜன்,தனபால்,பெரியகருப்பன் மாணிக்கம் ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர்.