ஆகஸ்ட்-செப்டம்பரில் முதல்வரின் சிறப்பு குறை தீர்வுத் திட்டம்: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
முதல்வரின் சிறப்பு குறை தீர்வுத் திட்டம் வரும் ஆகஸ்ட், செப்டம்பரில் நடத்தப்படும் என்று முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார். சட்டப் பேரவைaயில் விதி 110-ன் கீழ் அவர் வியாழக்கிழமை படித்தளித்த அறிவிப்பு:-மக்களின் குறைகளை அறிந்து அவற்றைத் தீர்ப்பதற்கு ஒவ்வொரு திங்கள்கிழமையும் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டமும், ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் வட்டாட்சியர் தலைமையில் அம்மா திட்ட முகாம்களும் நடத்தப்படுகின்றன.
இந்தக் குறைதீர்வுக் கூட்டங்களில் பட்டா மாற்றம், சமூகப் பாதுகாப்புத் திட்டம், முதல்வரின் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் அளிக்கப்படும் திட்டங்கள் ஆகியவற்றுக்கான கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. அரசின் இந்த நடவடிக்கைகளுக்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் ஒரு சிறப்புக் குறைதீர்க்கும் கூட்டத்தை அரசு செயல்படுத்த உள்ளது. நகரங்களில் உள்ள அனைத்து வார்டுகளிலும், அனைத்துக் கிராமங்களிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.
முதலமைச்சரின் சிறப்பு குறை தீர்வுத் திட்டம் என்ற திட்டமானது ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் செயல்படுத்தப்பட உள்ளது. இதன்மூலம், அனைத்து நகர்ப்புற வார்டுகளிலும், கிராமங்களிலும் ஆட்சியரின் மூலமாக விளம்பரம் செய்யப்படும். இதில் பெறப்படும் மனுக்கள் அனைத்தும் கணினியில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட துறைக்கு ஒரு வாரத்துக்குள் அனுப்பப்படும். இந்த மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் தீர்வு எட்டப்படும்.
மக்கள் அளித்த மனுக்களின் மீது தீர்வு செய்யப்பட்ட பிறகு செப்டம்பர் மாதத்தில் அமைச்சர்கள் தலைமையில் வட்ட அளவிலான விழாக்கள் நடத்தப்படும். சிறப்புத் திட்டத்தை செம்மையாகச் செயல்படுத்த ஒரு வட்டத்துக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.76.25 லட்சம் நிதியுதவி அளிக்கப்படும். நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள்: கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் மீன் உலர் கூடங்கள் உள்பட உள்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய நடமாடும் மீன் விற்பனை நிலையங்கள் ஏற்படுத்தப்படும்.
தமிழகத்தில் 29 நகரங்களில் மறு நில அளவைப் பணிகள் 3 தொகுதிகளாக எடுக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படும். நூற்றாண்டில் விழுப்புரம் நகராட்சி: விழுப்புரம் நகராட்சி 1988-ஆம் ஆண்டில் தேர்வுநிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இப்போது 42 வார்டுகளைக் கொண்டு விழுப்புரம் நகராட்சியாகச் செயல்பட்டு வருகிறது.
இந்த நகராட்சியானது நூற்றாண்டை கண்டுள்ளது. இதையொட்டி, அடிப்படை வசதிகளை மேலும் மேம்படுத்திட ரூ.50 கோடி நிதி ஒதுக்கப்படும். உண்டு உறைவிடப் பள்ளிகள்: விழுப்புரம் மாவட்டத்திலுள்ள எழுத்தூர், பாச்சேரி அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட தொடக்கப் பள்ளி, திருவண்ணாமலை மாவட்டம் அரசவெளி, நீலகிரி மாவட்டம் பொக்காப்புரம் ஆகிய இடங்களிலுள்ள பழங்குடியினர் உண்டு உறைவிட நடுநிலைப் பள்ளிகளை, உயர்நிலைப் பள்ளிகளாகவும், விழுப்புரம் மாவட்டம் இன்னாடு அரசு பழங்குடியினர் உண்டு உறைவிட உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாகவும் நிலை உயர்த்தப்படும்.
மதுரை கே.புளியங்குளம், கரூர் வாங்கல் குச்சிபாளையம், தருமபுரி காரிமங்கலம், நாமக்கல் கவுண்டம்பாளையம், திருநெல்வேலி ரெங்கசமுத்திரம் ஆகிய இடங்களில் ஐந்து சமுதாயக் கூடங்கள் கட்டப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தார்