சமூகவலைத்தள குற்றச்செயலில் ஈடுபடும் கிரிமினல்களின் விவரங்களை வாட்ஸ்அப் பேஸ்புக் நிறுவனங்கள் வழங்கலாம்: உயர் நீதிமன்றத்தில் ஐஐடி பேராசிரியர் தகவல் - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Friday, July 26, 2019

சமூகவலைத்தள குற்றச்செயலில் ஈடுபடும் கிரிமினல்களின் விவரங்களை வாட்ஸ்அப் பேஸ்புக் நிறுவனங்கள் வழங்கலாம்: உயர் நீதிமன்றத்தில் ஐஐடி பேராசிரியர் தகவல்


சமூக வலைத்தளங்களில் குற்றச்செயலில்ஈடுபடுபவர்களின் விவரங்களை சம்பந்தப்பட்ட சமூக வலைத்தள நிறுவனங்களால்தான் வழங்க முடியும் என்று ஐஐடி பேராசிரியர் மதுசூதனன் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் குற்றங்களில் ஈடுபட்டவர்களை எளிதில் அடையாளம் காண, சமூக வலைத்தள கணக்குகளுக்கு ஆதார் எண்ணை கட்டாயமாக்க கோரி   ஆண்டனி கிளமென்ட் ரூபன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் மணிக்குமார், சுப்பிரமணியம்பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணையில் உள்ளது. வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது வாட்ஸ்அப் தரப்பில் ஆஜரான வக்கீல், யூடியூப் வீடியோக்கள் வாட்ஸ்அப் மூலம் பகிரப்படுவதற்கு வாட்ஸ்அப் நிறுவனம் எப்படி பொறுப்பேற்க முடியும் என்று வாதிடப்பட்டது.  சுமார் 500 கோடி  மக்கள் பேஸ்புக்கை  பயன்படுத்தி வரும் நிலையில், குற்றச்செயல் புரிபவர்கள் யார் என்று கண்டறிந்து தகவல்களை வழங்குவது இயலாத ஒன்று என்று பேஸ்புக் தரப்பில் வாதிடப்பட்டது.

அப்போது, தமிழக அரசு தரப்பில்,  தகவல் தொழில்நுட்ப துறை வல்லுனரும், ஐஐடி பேராசிரியருமான மதுசூதனன் ஆஜராகி, பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் அனைத்தும் தனியார் நிறுவனங்கள் வரிசையில் வருகின்றன.இந்த தனியார் நிறுவனங்கள் இந்தியாவில் இயங்கும் போது, இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு  உட்பட்டுதான் செயல்பட வேண்டும்.வாட்ஸ்அப் மூலம் வதந்திகள் பரப்பப்படுவதாக கூறப்பட்டதை அடுத்து, குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டும் தகவல்களை பார்வேர்ட் செய்யும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துபவர்கள் குறித்த தகவல்களை சமூக வலைத்தள நிறுவனங்களால் அரசுக்கு வழங்க முடியும் என்றார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள்,  சமூக வலைத்தளத்தில் குற்றம் புரிவோரின் தகவல்களை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்த விவரங்களை ஐஐடி பேராசிரியர் தாக்கல் செய்ய வேண்டும்.  பேஸ்புக், வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் தமிழக அரசு கேட்கும் தகவல்களை எவ்வாறு வழங்க முடியும் என்பது குறித்து அந்தந்த நிறுவன தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி விளக்கமளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு வழக்கை ஆகஸ்ட் 21ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

Post Top Ad