இரவு, பகல் பாராது பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும்: அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தல்
இரவு, பகல் பாராது பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு குறைந்தபட்சம் குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியமாவது வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். கடந்த 2017-ம் ஆண்டு முதுகலை மருத்துவ மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி குமரன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.
இந்த வழக்கு விசாரணையின்போது, நோயாளிகளின் உறவினர்களால் அரசு மருத்துவர்கள் தாக்கப்படுவது குறித்து நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து அரசு மருத்துவ மனைகளில் சிசிடிவி கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். அவசர சிகிச்சை பிரிவுகளில் போதுமான எண்ணிக்கையில் மருத்துவர்களை நியமிக்க வேண்டும் என உத்தரவிட்ட உயர் நீதிமன்ற நீதிபதிகள், அரசு மருத்துவமனைகளில் போதிய எண் ணிக்கையில் மருத்துவர்கள் நியமிக் கப்பட்டுள்ளனரா, மருத்துவமனை களுக்கு ஒதுக்கப்படும் நிதி ஒதுக்கீடு எவ்வளவு என்பது குறித்தும் பல் வேறு கேள்விகளை எழுப்பியிருந் தனர். இந்த வழக்கு நீதிபதிகள் என்.கிரு பாகரன், வி.பார்த்திபன் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் வழக்கறிஞர் பி.கவிதா ஆஜராகி, ''இந்த வழக்கில் கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் விசாரணையை தள்ளி வைக்க வேண்டும்'' என கோரிக்கை விடுத்தார். அப்போது நீதிபதிகள், ''அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவில் 2 மருத்துவர்கள் எந்நேரமும் கண்டிப்பாக நியமிக்கப் பட வேண்டும், அதேநேரம் அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர்களுக்கு இணையான ஊதியமே வழங்கப்பட்டு வருகிறது.
பள்ளிப்படிப்பில் முதலிடம் பிடித்து மருத்துவத்துறையை தேர்வு செய்யும் மருத்துவர்கள், ஊதியக்குறைவால் தனியார் பன்னோக்கு மருத்துவ மனைகளை நாடிச் செல்கின்றனர். ஆசிரியர்களுக்கும், கல்லூரி பேராசி ரியர்களுக்கும் அதிக அளவில் ஊதியம் வழங்கப்படுகிறது. நீதிபதி களின் உதவியாளர்கள்கூட அரசு மருத்துவர்களைவிட கூடுதலாக சம்பளம் பெறுகின்றனர். எனவே, விடுப்புகூட எடுக்க முடியாமல் இரவு, பகல் பாராமல் பணிபுரியும் அரசு டாக்டர்களுக்கு குறைந்தபட்சம் குரூப் 1 அதிகாரிகளுக்கு இணையான ஊதியமாவது வழங்க வேண்டும்'' என தமிழக அரசுக்கு அறிவுறுத்தினர். பின்னர் இதுதொடர்பாக தமிழக அரசு 2 வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தனர்.