தமிழகம் முழுவதும் 10 மாணவர்கள் உள்ள பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாற்றம்:கூடுதல் ஆசிரியர்கள் தூக்கியடிப்பு,..பணியிட மாறுதல் வழங்குவதில் குளறுபடி,.. கல்வித்தரம் குறையும்
தமிழகத்தில் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. * இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். * மாணவர்கள் சேராமல் உள்ள பள்ளிகள் நூலகமாக மாற்றப்படுகிறது. * 46 பள்ளிகள் முதல்கட்டமாக நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளது. * 4 மாவட்டங்களில் 2 ஆசிரியர்கள் உள்ள இடங்களில் ஒரு ஆசிரியர் அதிரடியாக மாற்றப்பட்டார். தமிழகம் முழுவதும் 10 மாணவர்களோ அல்லது அதற்குகீழான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஓராசிரியர் பள்ளிகளாக மாற்ற பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கான முதல் கட்ட நடவடிக்கைகள் நேற்று முதல் தொடங்கின. நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கூடுதல் ஆசிரியர்கள் நேற்று பணியிடமாற்றம் செய்யப்பட்டனர். தமிழகத்தில் தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகள், உயர்நிலைப்பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகள் என மொத்தம் 38 ஆயிரம் அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. மாவட்டம், ஒன்றிய அளவில் பிரிக்கப்பட்டு அரசுப்பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. 3 கி.மீ ஒரு பள்ளி என்கிற அளவுக்கு, தமிழகத்தில் பள்ளிகள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றில் 2.30 லட்சம் பேர் ஆசிரியர்களாக பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் மத்திய அரசின் நிதி அயோக் அறிவுறுத்தல்படி மாணவர்கள் குறைவாக உள்ள பள்ளிகளை மூட தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதுதொடர்பாக தகவல் பரவிய நிலையில் பள்ளிக்கல்வித்துறை தரப்பில் இதற்கு மறுப்பு தெரிவிக்கப்பட்டது.
மாணவர்கள் சேராமல் உள்ள பள்ளிகளை நூலகமாக மாற்றப்படுகிறது. அந்த பள்ளிகள் மூடப்படவில்லை என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கூறி வந்தார். மாணவர்கள் இல்லாத 46 பள்ளிகள் முதல்கட்டமாக நூலகங்களாக மாற்றப்பட்டுள்ளது. இந்நிலையில் மத்திய அரசு வெளியிட்ட புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையிலும், இதுதொடர்பான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த புதிய கல்விக்கொள்கையில் பல்வேறு பிரச்னைகள் உள்ளதால், இதை திரும்ப பெற வேண்டும் என்று நடிகர் சூர்யா குரல் கொடுத்தார். தமிழகத்தில் எதிர்கட்சிகள் ஒருசேர புதிய கல்விக்கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதுதவிர கல்வியாளர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் பல தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் மாணவர்கள் குறைவாக உள்ள அரசுப்பள்ளிகள் மூடப்படாது என்று அரசு அறிவித்து வந்த நிலையில், அதற்கான முதல்கட்ட நடவடிக்கையை நேற்று தொடங்கியுள்ளது. தமிழகத்தில் 1,300 பள்ளிகளில் 50க்கும் குறைவான மாணவர்கள் படித்து வருகின்றனர். இவற்றில் 10 மாணவர்கள், அதற்குகீழ் உள்ள மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றப்பட உள்ளது. இதற்காக 10 மாணவர்கள், அதற்குகீழ் மாணவர்கள் உள்ள பள்ளிகள் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் நேற்று மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ளனர். ஏற்கனவே தமிழகத்தில் உள்ளது போன்ற பள்ளிகள் கட்டமைப்பை உருவாக்குவது கடினம், அதனால் அரசுப்பள்ளிகளை மூடக்கூடாது என்று கல்வியாளர்கள் கூறி வரும் நிலையில் இந்த பட்டியல் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.
10 பேர் அல்லது அதற்கு குறைவான மாணவர்கள் உள்ள பள்ளிகள் இதுவரை 2 ஆசிரியர்கள் பணியாற்றும் ஈராசிரியர் பள்ளிகளாக செயல்பட்டு வந்தன. இந்நிலையில் குறிப்பிட்ட உத்தரவால் இரண்டு ஆசிரியர்கள் பணியாற்றும், பள்ளிகளில் அதிக பணி அனுபவம் உள்ள ஆசிரியரை அதே பள்ளியில் தொடர வைக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. பணி அனுபவம் குறைவாக உள்ள ஆசிரியரை வேறு பள்ளிக்கு மாற்ற பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. அதன்படி, பணியிடமாற்றம் செய்யப்பட உள்ள ஆசிரியர்களை அழைத்து பேசியுள்ளனர். பின்னர் நெல்லை, தூத்துக்குடி உள்பட 4 மாவட்டங்களில் 2 ஆசிரியர்கள் உள்ள இடங்களில் ஒரு ஆசிரியர் அதிரடியாக மாற்றப்பட்டார். இதற்கான கவுன்சலிங் நேற்று 4 மாவட்டங்களிலும் நடந்தது. ஏற்கனவே ஒன்றிய அடிப்படையிலும், அதற்கடுத்தபடியாக மாவட்ட அடிப்படையிலும் சீனியாரிட்டி பட்டியல் தயாரிக்கப்பட்டு பணி அனுபவம் அடிப்படையில் டிரான்ஸ்பர், பதவி உயர்வு வழங்கப்படும். ஆனால் தற்போது மாற்றப்படும் ஓராசிரியர் அதே ஒன்றியத்துக்குள் பணியிடமாற்றம் செய்யாமல் வேறு ஒன்றியத்துக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இவ்வாறு மாற்றுவதால், குறிப்பிட்ட ஆசிரியர்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படும். அதனால் அவர்கள் தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெறுவதற்காக காலம் அதிகரிக்கும். சீனியாரிட்டி பட்டியலில் குளறுபடி ஏற்படும் என்பதால் ஆசிரியர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆசிரியர்களின் சீனியாரிட்டி பாதிக்கப்படுவது ஒருபுறம் என்றால் மற்ெறாருபுறம், கல்வித்தரம் கேள்விக்குறியாகும் நிலை உள்ளது. இரண்டு ஆசிரியர்கள் உள்ள பள்ளியில் ஒரு ஆசிரியர், விடுப்பு எடுக்கும்பட்சத்தில் மற்றொரு ஆசிரியர் கட்டாயம் பள்ளிக்கு வந்து வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகின்றனர். இந்நிலையில் இவற்றை ஓராசிரியர்கள் பள்ளிகளாக மாற்றும்பட்சத்தில், குறிப்பிட்ட ஆசிரியர் அனைத்து வேலை நாட்களிலும் கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டிய சூழல் உள்ளது. குறிப்பிட்ட ஆசிரியருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டு அவர் பள்ளிக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டால் பள்ளிக்கு விடுமுறைவிட வேண்டிய சூழல் ஏற்படும். வேறு பள்ளியிலிருந்து மாற்று ஆசிரியர் வந்தாலும், அந்த ஆசிரியரால் விடுமுறையில் சென்ற ஆசிரியர் போல் அல்லது அதன் தொடர்ச்சியை பாடமாக எடுக்க முடியாது. பள்ளியை திறந்து மூடுவதற்கு மட்டுமே அந்த ஆசிரியர் பயன்படுவார். ஏற்கனவே அரசுப்பள்ளிகளில் கல்வித்தரம் கேள்விக்குறியாக உள்ள நிலையில், தற்போதை நடவடிக்கையால் கல்வித்தரம் மேலும் குறையும் அபாயம் உள்ளதாக கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.