ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்களை தனியாருக்கு தாரை வார்க்கிறது அரசு
தமிழ்நாட்டில் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் ஒரு மாணவர் கூட இல்லையென்று 46 பள்ளிகளை மூடிட தமிழக அரசு எடுத்திருக்கும் முடிவு அதிர்ச்சியளிக்கிறது.
அரசுபள்ளிகளை மேம்படுத்திட வேண்டும் என்பதற்காகபுதியதாக தொடங்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு அங்கீகாரம் அளிக்க கூடாது என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அதுமட்டுமில்லாமல் தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி 25 சதவீதம் இட ஒதுக்கீடு அடிப்படையில் அரசே முன்வந்து ஆன்லைன் மூலமாக விண்ணப்பம் பெற்று மாணவர்களை சேர்த்துவிடுவது மட்டுமின்றி ₹100 கோடிக்கும் மேலாக கட்டணமும் வழங்கி வருவது வேதனையளிக்கிறது.
இப்படிப்பட்ட அரசின் முடிவு சரிதானா என்று யோசித்து பார்க்கவில்லை என்பது தான் வருத்தமளிக்கிறது. அரசு பள்ளிகளை திறம்பட இயங்க வைக்க எந்த நடவடிக்ைகயையும் எடுக்காத அரசு அதை மூடிவிட்டு, மாணவர்களையும் அரசு பள்ளிகளில் சேர்வதற்கு ஊக்கமளிக்காமல் இருப்பது எந்த வகையில் நியாயம்? அரசின் இந்த செயல்பாடு மிகவும்ஆபத்தானது எதிர்காலத்தில் கல்வி என்பது வியாபாரப்பொருளாகி, தனியார் வசம் பெரும் பணம் கொட்டும் நிலைக்கு தள்ளப்படும்; அரசு தொடர்ந்துஇப்படி ஊக்குவிப்பதால், ஆண்டுக்கு 1.25 லட்சம் மாணவர்கள் தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தஞ்சம் அடைய வேண்டிய நிலை ஏற்படுகிறது. இப்படிப்பட்ட மாணவர்களை தாரைவார்த்துவிட்டு அரசு பள்ளிகளில் மாணவர்களில்லை; அதனால் பள்ளிகளை மூடிவிட்டு நூலகங்களாக மாற்றுகிறோம் என்று கூறுவது ஏற்புடையது அல்ல.இந்நிலை நீடித்தால் எதிர்காலத்தில் அரசு பள்ளிகள் அனாதையாகிவிடுவதோடு மூடப்படும் அபாயம்ஏற்படும். ஆகையால் தமிழக அரசு அரசு பள்ளிகளை மூடுவதை கைவிட்டுவிட்டு போதிய வசதியின்றி அங்கீகாரம் இல்லாமல் செயல்படும் 3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில் சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
பள்ளிக்கல்வித்துறையினை மேம்படுத்திட பல்வேறு நிதி நெருக்கடி இருந்தும் கடந்த 2018-19ம் ஆண்டில் 28,757 கோடியினை அரசு நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கீடு செய்து இருந்தது. அதில், தற்போது ஆண்டு கணக்கு தணிக்கை அறிக்கையில் 2018-19ம் ஆண்டில் ₹1627 கோடி செலவு செய்யாமல் திருப்பி அனுப்பப்பட்டதாக தெரிவித்து இருப்பது அதிர்ச்சியளிக்கிறது.முறையான திட்டமிடல் இல்லாததால் ஒதுக்கீடு செய்த நிதியினை பயன்படுத்தவில்லை.பள்ளிகளை மேம்படுத்ததன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தொழிலதிபர்கள், முன்னாள் மாணவர்கள் ஒருபுறம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அழைப்பு விடுக்க மறுபுறம் அரசு ஒதுக்கிய நிதியினை முறையாக பயன்படுத்தாதது அதிர்ச்சி அளிக்கிறது.இந்த நிதியை கொண்டு பெரும்பாலான பள்ளிகளில் கழிவறைகளை மாற்றி அமைத்திருக்கலாம்.
உட்கட்டமைப்பு வசதிகள், கணினி ஆய்வகம், மொழி ஆய்வகம் உள்ளிட்டபாடவாரியான ஆய்வகங்கள் மற்றும்மாணவர்களின் நலன்கருதி கண்காணிப்பு கேமராக்கள், கூடுதல் வகுப்பறைகள் ஏராளமான தேவைகள் இருக்கும் போது ₹1627 கோடியினை செலவழித்து இருக்கலாம். அவ்வாறு செலவு செய்யாமல் விட்டதன் விளைவாக பல்வேறு பள்ளிகளில் உட்கட்டமைப்பு வசதிகள் செய்து தர முடியாத நிலை கடந்தாண்டு ஏற்பட்டுள்ளது. தற்போது, அரசு பள்ளிகளில் ஒற்றை இலக்கில் மாணவர்கள் எண்ணிக்கை இருப்பதாக கூறி மூட நினைக்கும் தமிழக அரசு வருங்காலங்களிலாவது அந்த பள்ளிகளின் தரத்தை உயர்த்தி கூடுதல் மாணவர்களை சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.3000க்கும் மேற்பட்ட தனியார் மெட்ரிக் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை அரசுபள்ளிகளில்சேர்த்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.