மாணவர்கள் படிக்கட்டுப் பயணத்தைத் தவிர்க்க பள்ளி முடிந்ததும் ஒரே நேரத்தில் மாணவர்களை வெளியே அனுப்பாமல் ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் அவர்களை பிரித்து அனுப்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இது குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள விவரம் வருமாறு:
இந்திய தேசிய குற்றவியல் அறிக்கையின்படி தமிழ்நாட்டில் ஆண்டுதோறும் 65ஆயிரம் பேர் சாலைவிபத்தில் உயிரிழக்கின்றனர். 2018ல் 18வயதிற்கு குறைவான மாணவர்களின் இறப்பு எண்ணிக்கை 569 ஆகும். உலக அளவில் வாகன எண்ணிக்கையில் தமிழ்நாடு ஒரு சதவீதத்தினைப் பெற்றிருந்தாலும் விபத்துக்கள் 7 சதவீதமாக உள்ளது.
இதற்கு விதிமுறை மீறலே முக்கியக் காரணம்.
விபத்துக்களின் எண்ணிக்கையைக் குறைப்பதில் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் பொறுப்பு உள்ளது.
இதனைக் கருத்திற்கொண்டு தலைமையாசிரியர்கள், அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு இருசக்கர வாகனத்தில் வரும்போது கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்.
இதில் இவர்கள் மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ வேண்டும். இதன் மூலம் மாணவர்கள், பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டு சமுதாயத்தில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தலாம்.
பள்ளி இறைவணக்கத்தின் போது பேருந்து படிக்கட்டுப் பயணம், பேருந்து ஜன்னல் வழியே ஏறி இடம்பிடிப்பதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்த வேண்டும். மேலும் சாலையைக் கடக்கும் போது இருபக்கமும் பார்த்து கடக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்த வேண்டும்.
பள்ளியில் இருந்து ஒரே நேரத்தில் வகுப்புகள் முடிந்து வெளியே வரும் போது கூட்டம் சேர்வதால் படிக்கட்டில் மாணவர்கள் பயணிக்கிறார்கள். எனவே ஒவ்வொரு 15 நிமிட இடைவெளியில் மாணவர்களை வெளியே அனுப்ப வேண்டும்.
பள்ளி மாணவர்கள் மோட்டார் சைக்கிளில் பள்ளிக்கு வந்தால் அவர்களை அனுமதிக்கக் கூடாது. உடற்பயிற்சி ஆசிரியர்கள் பேருந்து நிறுத்தத்தில் ஒரு மணி நேரம் மாணவர்களை ஒழுங்குபடுத்தி பேருந்தில் ஏற்றி விட வேண்டும்.
நாட்டுநலப்பணித்திட்டத்திற்கு மாவட்ட தொடர்பு அலுவலர் இருப்பதைப் போல சாலைப்பாதுகாப்பு மன்றத்திற்கும் மாவட்ட அளவில் ஒருவரை நியமனம் செய்ய வேண்டும். இதற்காக தேசிய மாணவர் படை, சாரண, சாரணியர் இயக்கத்தில் பணிபுரியும் திறமையான ஆசிரியரை நியமிக்கலாம்.
அவரது தலைமையில் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகளிலும் சாலைப் பாதுகாப்பு மன்றம் துவங்கி மாணவர்களை உறுப்பினர்களாக செயல்பட தொடர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது