காவலர் எழுத்துத் தேர்வு: 2.70 லட்சம் பேர் எழுதினர்: வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, August 25, 2019

காவலர் எழுத்துத் தேர்வு: 2.70 லட்சம் பேர் எழுதினர்: வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து

காவலர் எழுத்துத் தேர்வு: 2.70 லட்சம் பேர் எழுதினர்: வினாத்தாள் எளிதாக இருந்ததாக தேர்வர்கள் கருத்து



தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இரண்டாம் நிலை காவலர் பணிக்கான எழுத்துத் தேர்வை 2.70 லட்சம் பேர் எழுதினர். வினாத்தாள் மிக எளிதாக இருந்ததாக தேர்வர்கள் தெரிவித்தனர்.
இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் ஒரு மாதத்தில் காவல் துறை இணையதளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வுக் குழுமம் சார்பில் இரண்டாம் நிலை காவலர் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு தமிழகம் முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டம் மற்றும் மாநகர ஆயுதப்படை, சிறைக் காவலர், தீயணைப்பாளர், தமிழ்நாடு சிறப்பு காவல் படை ஆகிய பிரிவுகளில் 8 ஆயிரத்து 826 காலிப் பணியிடங்களுக்காக 228 தேர்வு மையங்களில் நடத்தப்பட்ட இந்தத் தேர்வுக்கு 3 லட்சத்து 22 ஆயிரம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் 2.70 லட்சம் பேர் தேர்வெழுதினர். இதற்காக 32 மாவட்ட தலைநகரங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. சீருடைப் பணியாளர்கள் தேர்வாணைய கூடுதல் டி.ஜி.பி. சந்தீப்ராய் ரத்தோர் மேற்பார்வையில் 228 கல்லூரிகளில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. காவல் துறை கண்காணிப்பாளர்களின் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது. டி.ஐ.ஜி.க்கள் தேர்வு மையங்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சென்னையில் 19,990 பேர்: சென்னையில் மட்டும் 13 மையங்களில் 19,990 பேர் இத் தேர்வை எழுதினர். தேர்வு மையங்களுக்கு செல்லிடப்பேசி கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டிருந்தது. பலத்த சோதனைக்கு பிறகே தேர்வு மையத்துக்குள் செல்ல அனுமதிக்கப்பட்டனர். காலை 10 மணி முதல் 11.20 மணி வரை 80 நிமிஷங்கள் தேர்வு நடைபெற்றது. மொத்தம் 80 மதிப்பெண்களுக்கு வினாக்கள் இடம்பெற்றிருந்தன. அதில் 50 மதிப்பெண்கள் பொது அறிவு தொடர்பாகவும், 30 மதிப்பெண் உளவியல் தொடர்பாகவும் கேட்கப்பட்டிருந்தன.

பெண் தேர்வர்களுக்கு தனி மையம்: கோடம்பாக்கம் மீனாட்சி மகளிர் கல்லூரியில் பெண்கள் மட்டும் தேர்வு எழுதுவதற்கு வசதியாக தனி மையம் அமைக்கப்பட்டிருந்தது. இந்தத் தேர்வு மையத்தில் ஞாயிற்றுக்கிழமை காலையில் ஏராளமான பெண்கள் குவிந்திருந்தனர். கர்ப்பிணிகளும் காவலர் பணியில் சேருவதற்கு அதிக ஆர்வம் காட்டினர். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பெண்கள் கை நிறைய வளையல்களுடன் தேர்வு மையத்துக்கு வந்தனர். நேரம் கடந்த நிலையிலும் வந்த பல பெண்களும் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர்.
காவல் ஆணையர் நேரில் ஆய்வு: சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட தேர்வு மையத்தை மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விசுவநாதன் நேரில் ஆய்வு செய்தார். இந்தத் தேர்வை எழுதி முடித்தபின் வெளியே வந்த கே.சியாமளா, டி.நடராஜன், பி.மலர்விழி, குமரேசன் உள்ளிட்ட தேர்வர்கள் கூறியது: வினாத்தாள் மிகவும் எளிமையாக இருந்தது. செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சிகளில் வெளியாகும் செய்திகளை தவறாமல் பார்த்து வந்திருந்ததால் ஒவ்வொரு வினாவுக்கும் கொடுக்கப்பட்ட அவகாசத்தில் பதிலளிக்க முடிந்தது.

இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் உளவியல் வினாக்கள் எதிர்பார்த்ததைக் காட்டிலும் எளிமையாக கேட்கப்பட்டிருந்தன. இந்தத் தேர்வுக்கு சிறப்பான முன் தயாரிப்புகளை மேற்கொண்டிருந்ததால் 90 சதவீத மதிப்பெண்களுக்கு மேல் நிச்சயமாகப் பெற முடியும் என்றனர்.
அதிகளவில் விண்ணப்பித்த பட்டதாரிகள்: இது குறித்து காவல் துறை உயரதிகாரிகள் கூறியது: காவலர் எழுத்துத் தேர்வுக்கான கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு என நிர்ணயிக்கப்பட்டிருந்தாலும் பட்டதாரிகள், முதுநிலைப் பட்டதாரிகள் என லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்திருந்தனர். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கு அடுத்த கட்டமாக உடல் தகுதித் தேர்வு நடைபெறும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் உடல் தகுதித் தேர்வுக்கு அனுமதிக்கபடுவர்.

கயிறு ஏறுதல், ஓட்டப் பந்தயம் உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்படும். மார்பு அளவு, உயரம் ஆகியற்றையும் கணக்கிட்டு உடல் தகுதித் தேர்வில் ஆட்களைத் தேர்வு செய்வார்கள். இந்த இரண்டிலும் வெற்றி பெற்றவர்களுக்கு போலீஸ் வேலைக்கான பணி நியமன ஆணை வழங்கப்படும். வேலைக்குத் தேர்வு செய்யப்பட்டவர்கள் விவரம் ஒரு மாதத்தில் காவல் துறை இணைய தளத்தில் வெளியிடப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு 6 மாதம் பயிற்சி அளிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்படுவார்கள் என்றனர்.
தேர்வில் ஆள்மாறாட்டம்: மூவர் கைது 
காவலர் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததாக அரியலூர் மாவட்டத்தில் மூன்று பேரை போலீஸார் கைது செய்தனர். ஜெயங்கொண்டம் அருகில் தத்தனூரில் உள்ள தனியார் கல்லூரியில் காவலர்களுக்கான எழுத்துத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுதியவர்களில் ஒருவரான ரகுபதி என்பவரின் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டை சோதனை செய்ததில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

விசாரணையில், அவர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த தேவ பிரசாந்த் என்பவருக்காக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது தெரியவந்தது. மேலும், இதற்காக 1 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் பேரம் பேசி 1 லட்சம் ரூபாய் முன்பணம் வாங்கியதும் தெரியவந்தது. இதுகுறித்து தேர்வு கண்காணிப்பாளர் அளித்தப் புகாரைத் தொடர்ந்து, ரகுபதி மற்றும் தேர்வு எழுதக் கூறிய தேவ பிரசாந்த் உள்ளிட்ட 3 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில்... இது போன்று திண்டுக்கல் மாவட்டத்தில் போலி நுழைவுச் சீட்டு மூலம் காவலர் தேர்வு எழுத முயன்ற இருவர் பிடிபட்டுள்ளனர்.


Post Top Ad