மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கிய விவகாரம்- 2 ஆசிரியர்கள் சஸ்பெண்டு
உத்தரபிரதேச மாநிலம் மிர்சாபூர் மாவட்டத்தில் உள்ள சியூரி கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.
இந்த பள்ளியில் படிக்கும் சிறுவர்கள்-சிறுமிகளுக்கு தினமும் ஒரு சப்பாத்தியும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் சமூகவலைதளத்தில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தின.
பள்ளி வளாகத்தில் அமர்ந்து ரொட்டியை உப்பில் தொட்டுக்கொண்டு சிறுவர்கள் சாப்பிடும் வீடியோவை பார்த்த பலரும் சமூகவலைதளங்களில் அரசை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
பள்ளியில் மாணவர்களுக்கு ரொட்டியும், உப்பும் வழங்கப்படும் நேரத்தில் பள்ளி வளாகத்தில் இருக்கும் மதிய உணவுப் பட்டியலில் பருப்பு சாதம், ரொட்டி, காய்கறிகள் என்று வரிசையாக அடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சிறுவர்களின் பெற்றோர் கூறுகையில், பெரும்பாலான நாட்களில் குழந்தைகளுக்கு ரொட்டியும், தொட்டுக்கொள்ள உப்பும், சில நாட்களில் சாதமும், அதற்கு தொட்டுக்கொள்ள உப்பும் தான் அளிக்கப்படுகிறது. யாராவது முக்கிய பிரமுகர்கள் வந்தால் மட்டும் குழந்தைகளுக்கு பால் மற்றும் உரிய உணவு வழங்கப்படுகிறது என்றனர்.
இதுகுறித்து மாவட்ட நீதிபதி அனுராக் பட்டேலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விசாரணைக்கு உத்தரவிட்டார். முதல்கட்ட விசாரணையின் அடிப்படையில் இதற்கு காரணமான ஆசிரியர் மற்றும் மதிய உணவு வழங்கும் நிர்வாகி ஆகிய 2 பேர் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மாநில அரசுக்கு காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, பள்ளி மாணவர்களுக்கு சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள உப்பு வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்குமாறு மாநில பள்ளிக்கல்வித்துறை மந்திரி சதீஷ் திவேதிக்கு, முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
அதன்பேரில் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து கல்வித்துறை மந்திரி சதீஷ் திவேதி கூறுகையில், ‘சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றார்.