உஷார் பெற்றோர்களே..! 4 வயது சிறுவனை உயிர்பலி வாங்கிய ஜெல்லி மிட்டாய் ...!
இன்றைய காலகட்டத்தில் குழந்தைகள் அதிகம் விரும்பி சாப்பிட நினைப்பது நொறுக்குத்தீனிகள், ஜங்க் ஃபுட்ஸ் தரமில்லாத இனிப்பு வகைகள். ஆனால் இதெல்லாம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் என்றால் கட்டாயம் இல்லவே இல்லை என்பது தான் உண்மையான விஷயம்.
இது பெற்றோர்களுக்கு தெரிந்தாலும் கூட சில நேரங்களில் நம்மையும் மீறி குழந்தைகளின் அடம்பிடிக்கும் தன்மையால் வாங்கிக் கொடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. அவ்வாறாக நிகழ்ந்த ஒரு சம்பவத்தில் குழந்தை உயிரையே விட்டுள்ளது என்றால் நம் மனது எப்படி துடிக்கிறது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
பெரம்பலூரில் உள்ள ஆலம்பாடி என்ற பகுதியில் வசித்து வரும் சசிதேவி தர்மராஜ் தம்பதியினருக்கு 4 வயதில் மகன் உள்ளார். ரங்கநாதன் என பெயரிடப்பட்ட இக்குழந்தையை கடந்த 4 ஆண்டுகளாக எவ்வளவு பாசமாக வளர்த்து வந்து இருப்பார்கள் பெற்றோர்கள். ஆனால் ஜெல்லி மிட்டாய் வேண்டும் என கேட்டு அடம் பிடித்ததால் குழந்தையின் தாய் சமாதானம் படுத்துவதற்கு கடைக்கு அழைத்துச் சென்று ஜெல்லி மிட்டாய் வாங்கிக் கொடுத்து உள்ளார். வாங்கிக் கொடுக்கும் வரை குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததால் ஜெல்லி மிட்டாய் வாங்கி கொடுத்த அடுத்த தருணமே அதனை பிரித்து அழுதுகொண்டே வாயில் போட்டு உள்ளான்.
அந்த ஜெல்லி மிட்டாய் எதிர்பாராதவிதமாக மூச்சுக் குழாய்க்குள் சென்று அடைத்து உள்ளது. பின்னர் மூச்சுத்திணறி துடிதுடித்து தாய் கண்முன்னே உயிரை விட்டுள்ளான் சிறுவன். என்ன செய்வது ஏது செய்வது என தெரியாமல் பதறி அடித்துக் கொண்டு குழந்தையை தூக்கிக்கொண்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சென்ற பெற்றோருக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி.
குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மூச்சுத் திணறி குழந்தை இறந்து உள்ளது என தெரிவித்ததை அடுத்து கதிகலங்கி கதறி அழ தொடங்கி உள்ளனர் பெற்றோர்கள். அதேவேளையில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு குழந்தை இறந்துள்ளது என்பதால் இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் அனுப்பப்பட்டு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வெறும் ஐந்து ரூபாய் பத்து ரூபாய்க்கு கிடைக்கும் தின்பண்டங்களை அதனுடைய பாதிப்புகளை தெரிந்து கொள்ளாமலேயே அவசரத்திற்கு வாங்கி விடுகிறோம்.. குழந்தைகளுக்கு கொடுத்து விடுகிறோம்... ஆனால் இப்படி ஒரு விபரீதத்தை யார்தான் எதிர்பார்த்திருக்க முடியும்? இருந்தாலும் குழந்தைகள் விஷயத்தில் பெற்றோர்கள் மிக மிக கவனமாக இருப்பது முக்கியம். இங்கு பெற்றோர்கள் என்பது தாய் தந்தை இருவருமே தான் ஒரு சிலர் வீட்டில் குழந்தை வளர்ப்பில் தந்தைக்கு தெரியாத பல விஷயங்கள் இருக்கும் எனவே எதுவாக இருந்தாலும் எதைக் கொடுக்க வேண்டும் எதைக் கொடுக்கக் கூடாது எப்படி கொடுக்க வேண்டும் இதுபோன்ற எந்த ஒரு விஷயத்தையும் மனைவியிடமோ அல்லது வீட்டு பெரியவர்களிடமோ கேட்டறிந்து பின்னர் குழந்தைகளுக்கு கொடுத்து வளர்ப்பது மிகவும் நல்லது.இதனால்தான் அக்காலத்தில் கூட்டுக் குடும்பத்தில் இருக்கும்போது குழந்தை வளர்ப்பில் அனுபவம் வாய்ந்த பெரியவர்கள் எந்த ஒரு இக்கட்டான சூழ்நிலையையும் எளிதாக சமாளிப்பார்கள் ஆனால் இன்றோ கணவன் மனைவி குழந்தை என தனிக் குடும்பமாக இருக்கிறார்கள் போதாத அனுபவத்தை வைத்துக் கொண்டு குழந்தைகள் விஷயத்தில் ரிஸ்க் எடுத்து விடுகிறார்களோ இன்றைய பெற்றோர்கள் என்ற எண்ணம் இதுபோன்ற சம்பவத்தால் நம்மால் உணர முடிகிறது.