6.44 லட்சம் மாணவர்களுக்கு நோய் பாதிப்பு கண்டுபிடிப்பு
தமிழகத்தில் அரசு பள்ளி, அங்கன்வாடி மையங்களில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு பல்வேறு நோய் பாதிப்பு இருப்பதாக தெரியவந்தது. இதனால் மாணவ மாணவிகள் கற்றல் குறைபாடு இருப்பதாக கண்டறியப்பட்டது. இதை தவிர்க்க மத்திய அரசின் ராஷ்டிரிய பால் ஸ்வஸ்திய கார்யக்ரம் திட்டத்தின் கீழ் நோய் பாதித்தவர்களை கண்டறியும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
நடப்பாண்டில் மே மாத இறுதி வரை பள்ளி, அங்கன்வாடி மையங்களில் 770 நடமாடும் மருத்துவ குழுவினரும், மாநகராட்சி பகுதியில் 27 மருத்துவ குழுவினரும் ஆய்வு செய்தனர். இதில் மாணவ மாணவிகளுக்கு கண், காது, மூக்கு, தோல் நோய், சுவாசம், பிறவி குறைபாடு, விபத்து போன்றவற்றால் ஏற்பட்ட ஊனம் போன்றவை தொடர்பாக பரிசோதனை செய்யப்பட்டது.
இதில் 6,44,175 பேருக்கு நோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதில் 5,19,288 பேருக்கு நடமாடும் மருத்துவ குழு மூலமாக சிகிச்சை வழங்கப்பட்டது. 16,380 பேர் ஆபரேஷன் செய்ய மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். மாணவ மாணவிகள் பார்வை குறைபாட்டினால் சரியாக கல்வி கற்க முடியாமல் இருந்தால் உடனடியாக பள்ளி கல்வித்துறை மூலமாக மருத்துவமனையில் சேர்க்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.