காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல். - Kalvi Tips

SSLC, Plus One, Plus Two Study Materials, Question Papers, Key Answers, Kalviseithi

Post Top Ad

Sunday, August 25, 2019

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்.

காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தல்.


இது குறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் 

செந்தில்குமார் கூறியது:-

8 ஆண்டுகளுக்கு முன்னர் அரசுப்பள்ளிகளில் 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 16 ஆயிரத்து 549  பகுதிநேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர்.

உடற்கல்வி, ஓவியம், கணினி, இசை, தையல், தோட்டக்கல்வி, வாழ்வியல்திறன்கல்வி, கட்டிடக்கல்வி போன்ற கல்விஇணைச்செயல்பாடு பாடங்களை 6, 7 மற்றும் 8 வகுப்பு மாணவர்களுக்கு பகுதிநேரமாக நடத்தி வருகின்றனர்.


கடந்த 8 ஆண்டுகளில் சம்பள உயர்வு மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2ஆயிரமும், தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிசாமியால் எழுநூறு ரூபாயும் என 2 ஆயிரத்து 700 ரூபாய் மட்டுமே தரப்பட்டுள்ளது.
கடைசியாக எழுநூறு ரூபாய் சம்பள உயர்வு தந்து 2 ஆண்டுகள் முடிந்துவிட்டது. எனவே கல்வித்துறையினரும், அரசும் சம்பள உயர்வு குறித்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

தமிழ்நாடு அரசால் தற்போது எங்களுக்கு தரப்படும் ரூ.7ஆயிரத்து 700 சம்பளத்தினை ஆந்திரா மாநில பகுதிநேர ஆசிரியர்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாக உள்ளது. ஆந்திராவில் 2017வரை தரப்பட்ட ரூ.6ஆயிரம் சம்பளத்தை உயர்த்தி 14 ஆயிரமாக 2018ம் ஆண்டில் இருந்து தருகிறார்கள். மேலும் மகளிருக்கு சம்பளத்துடன் கூடிய 6 மாதம் மகப்பேறு கால விடுப்பும் தருகிறார்கள். எனவே தமிழக அரசும் ஆந்திராவில் தரப்படும் சம்பளத்தை எங்களுக்கும் வழங்குவது குறித்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிடவேண்டும்.

இக்குறைந்த சம்பளத்தை வைத்துக்கொண்டு பள்ளிக்கு சென்றுவர பேருந்து கட்டணம், பெட்ரோல் செலவு போக குடும்பத்தை பராமரிக்க கடனில் தத்தளித்து வருகிறோம்.  இப்போது பால்விலையும் உயர்ந்து விட்டது. அத்தியாவசிய பொருட்களின் விலைகள் எல்லாம் உயரும்போது எங்களின் சம்பளம் மட்டும் உயர்த்தாமல் இருப்பதை அரசும் அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும்.
குறைவான சம்பளத்தில் பணிபுரிந்துவரும் எங்களுக்கு கடந்த 8 ஆண்டுகளாக தராமல் மறுக்கப்பட்டுவரும் மே மாதம்  சம்பளம் ரூ.53 ஆயிரத்து 400ஐ நிலுவைத்தொகையாக ஒவ்வொருவருக்கும் தரவேண்டும். சம்பள உயர்வுக்கு வழிவகுக்கும் 4 பள்ளிகளில் வேலையை தரவேண்டும். 7வது ஊதியக்குழுவின் 30சதவீத ஊதிய உயர்வை தரவேண்டும். 2017ம் ஆண்டில் கல்விஅமைச்சர் செங்கோட்டையன் 3 மாதத்தில் பணிநிரந்தரம் செய்யக்கமிட்டி அமைக்கப்படும் என சட்டசபையில் அறிவித்ததை செயல்படுத்த வேண்டும்.

இதெல்லாம் நடைமுறைப்படுத்தி இருந்தாலே எங்களுக்கு பேருதவியாக இருந்திருக்கும். மனிதாபிமான அடிப்படையில் இறந்து போனவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி வழங்கவேண்டும். பணியில் சேர்ந்து இறந்தவர்களுக்கு அரசு செய்யும் உதவியே எஞ்சியிருக்கும் 12 ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களுக்கு பணிபாதுகாப்பை தரும்.

9 ஆண்டுகளாக  நாங்கள் திட்ட வேலையில் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றோம். இதே பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் உள்ளவர்களைபோல எங்களையும் காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்தால் மட்டுமே எங்களின் வாழ்வாதாரம் மேம்படும். எனவே மனிதநேயத்தோடு தமிழக அரசு எங்களின் கோரிக்கையை நிறைவேற்றிட கேட்டுக்கொள்கிறோம்



சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு.
செல் நம்பர் :- 9487257203

Post Top Ad