கவுரவ ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப தேர்வு
புதுச்சேரி : பள்ளிக் கல்வித் துறையில் கவுரவ ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு விரைவில் நடத்தப்பட உள்ளது. புதுச்சேரி அரசு பள்ளிகளில் பாலசேவிகா பணியிடங்கள் 180, கம்ப்யூட்டர் பயிற்சியாளர் பணியிடங்கள் 18, பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் 64, விரிவுரையாளர் பணியிடங்கள் 45, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் பணியிடங்கள் 8 என, மொத்தம் 315 இடங்கள் ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பை, கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டது.பல ஆண்டுகளுக்கு பின், பள்ளிக் கல்வித் துறையில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
இதனால், ஒப்பந்த அடிப்படையிலான, கவுரவ ஆசிரியர் பணியிடங்களாக இருந்தாலும் ஆயிரக்கணக்கானோர் போட்டி போட்டுக் கொண்டு விண்ணப்பித்துள்ளனர்.இதில், பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்கள் போட்டித் தேர்வு ஏதுமின்றி நேரடியாக நிரப்பப்பட உள்ளது. அதாவது, 'சி - டெட்' தேர்வில் எடுத்த மதிப்பெண் 90 சதவீதம், வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி 10 சதவீதம் என்ற அடிப்படையில் கணக்கிட்டு பணி வழங்கப்பட உள்ளது.மற்ற பணியிடங்கள் அனைத்தும் போட்டித் தேர்வு அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இதுதொடர்பாக, பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் குப்புசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:கவுரவ பாலசேவிகா, கவுரவ கம்ப்யூட்டர் பயிற்சியாளர், கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களுக்கு போட்டித் தேர்வில் எடுக்கும் மதிப்பெண்் (90 சதவீதம்), வேலைவாய்ப்பு அலுவலக சீனியாரிட்டி (10 சதவீதம்) என்ற அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.போட்டித் தேர்வு 90 மதிப்பெண்ணிற்கு நடத்தப்படும். 70 கேள்விகள் பிரதான பாடங்களில் இருந்தும், 20 கேள்விகள் பொது அறிவு மற்றும் நடப்பு விவகாரங்கள் தொடர்பாகவும் கேட்கப்படும். சரியான விடைக்கு தலா ஒரு மதிப்பெண் வழங்கப்படும்.
தவறான விடைக்கு 0.25 மதிப்பெண் குறைக்கப்படும். இரண்டு மணி நேரம் நடக்கும் இந்த தேர்வுக்கான பாடத் திட்டம் பள்ளிக் கல்வித் துறை இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. http://schooledn.py.gov.in என்ற இணையதளத்தில் இருந்து பாடத் திட்டத்தை பதிவிறக்கம் செய்யலாம்.தேர்வு நடத்தப்பட உள்ள தேதி, இடம் குறித்த விபரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும்.இவ்வாறு, செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.சூட்டோடு சூடாக முடிவு வெளியீடுகவுரவ ஆசிரியர் பணியிடங்களை முழுவதும் தகுதி அடிப்படையில் நிரப்புவதற்கான நடவடிக்கைகளை பள்ளிக் கல்வித் துறை முடுக்கி விட்டுள்ளது. தேர்வு முடிந்த உடனே விடைத் தாள்களை திருத்தும் பணியை துவக்க வேண்டும்; அன்றைய தினமே இரவோடு இரவாக முடிவுகளை வெளியிட வேண்டும் என, கல்வி அமைச்சர் அலுவலகம் அறிவுறுத்தி உள்ளது.