ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரம்.. அசத்திய அரசுப்பள்ளி மாணவர்கள்..
வெளியூரில் வசிப்பவர்கள் சொந்த ஊருக்கு செல்லாமலேயே வசிக்கும் பகுதியில் இருந்தவாரே வாக்களிக்கும் வகையில் , ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்கி சென்னையை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள் அசத்தியுள்ளனர்..
இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகையினை கொண்ட ஜனநாயக நாடுகளில் ஒவ்வொரு முறையும் தேர்தலை நடத்தி முடிப்பது சவாலான ஒன்றாகவே உள்ளது. அதிலும், 100% வாக்குப்பதிவினை உறுதிப்படுத்த மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் ஆணையம் பெரும் தொகையினை செலவிட்டாலும் எதிர்பார்த்த வாக்குபதிவு சதவீதத்தை எட்டமுடியவில்லை என்பதை அன்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலிலும் பார்க்கமுடிந்தது.
பணி நிமித்தமாக வெளியூர்களில் உள்ளவர்கள் வாக்களிப்பதற்காக சொந்த ஊருக்கு செல்வதை தவிர்ப்பதாலும் வாக்குசதவீதம் குறைவதாக கூறப்படுகிறது.. இந்நிலையில், சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள அரசுப்பள்ளி மாணவர்களது கண்டுபிடிப்பான ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரம் அனைத்து தரப்பினரிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
ஆதார் எண் , கைரேகை , மற்றும் கண் விழித்திரை ஆகியவற்றை இயந்திரத்தில் பதிவேற்றி விடுவதினால் நாட்டில் எந்தப்பகுதியில் இருந்தும் வாக்காளர் அட்டை ஆதார் அட்டை கொண்டு தாங்கள் தொகுதியில் உள்ள விரும்பும் கட்சியின் வேட்பாளருக்கு வாக்களிக்க முடியும் எனவும் ஒரு ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரத்தை உருவாக்க ஐந்தாயிரம் ரூபாய் மட்டுமே செலவாகும் என்கிறார் கோடம்பாக்கம் கணபதி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர் ஜெயசந்தர்.
ஒரு முறை வாக்களித்தவர் மீண்டும் வாக்களிக்க முயன்றால் இயந்திரத்தில் இருந்து வரும் அலர்ட் அதிகாரிகளுக்கு செல்வதோடு காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கும் மாணவர் பிரதீப் குமார், ஸ்மார்ட் இயந்திரத்தின் செயல்பாடு குறித்து செயல்முறை விளக்கமும் அளிக்கிறார்.
தங்களது பள்ளியில் அரசு அமைத்து கொடுத்திருக்கும் அட்டல் டிங்கரிங் லேப் எனப்படும் நவீன அறிவியல் ஆய்வகம் மாணவர்களது ஆய்வுத்திறனை ஊக்குவிக்க பெருமளவில் உதவுவதாகவும், இதனால் தேசிய அளவிலான அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கான போட்டிகளில் கலந்துக்கொண்டு விருதுகள் மற்றும் பரிசுகளையும் பெற்று வருவதாகவும், இந்த ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரத்தை கண்டுபிடித்த மாணவர்களை கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பாராட்டியதோடு 10 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கியதாக பெருமிதம் கொள்கிறார் தலைமை ஆசிரியர் தமிழரசி.
தனியார் பள்ளி மற்றும் சிபிஎஸ்சி மாணவர்களுக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அரசுப்பள்ளி மாணவர்கள் இதுபோன்று தொடர்ந்து நிரூபித்துக்கொண்டே இருக்கின்றனர் , இந்நிலையில் அவர்களது கண்டுபிடிப்பை தேசிய அளவில் தெரியப்படுத்த ஸ்மார்ட் வாக்குப்பதிவு இயந்திரத்தை தலைமை தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு பள்ளிகல்வித்துறை கொண்டு செல்ல வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது..