ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி: மத்திய அரசு முடிவு
ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்களுக்கு மீண்டும் பணி வழங்க மத்திய அரசு முடிவு செய்து அறிவித்துள்ளது. அரசு பணியில் இடைக்கால அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, நிரந்தர அதிகாரிகளின் பணியிடங்களைக் குறைத்து அதன் மூலம் செலவினங்களைக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
முக்கிய துறைகளின் குறிப்பிட்ட சில பிரிவுகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்களுக்கு மட்டுமே இந்த வாய்ப்பு வழங்கப்படும். ரயில்வே மற்றும் அறிவியல் துறைகளில் உள்ள ஒரு சில குறிப்பிட்ட பிரிவுகளில் மாதம் ரூ.35,000 ஊதியத்தில், ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர்கள் பணியமர்த்தப்பட உள்ளனர்.
அந்த வகையில்தான் பகுதி நேர ஊழியர்களாக ஓய்வு பெற்ற அதிகாரிகளை மீண்டும் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. செலவினத்தை குறைக்க மத்திய அரசு இம்முயற்சியில் ஈடுபட்டிருப்பதாகக் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதே சமயம், இவ்வாறு நியமிக்கப்படும் பகுதி நேர ஊழியர்கள், எவ்வித முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யவும் இயலும் என்று அந்த தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பகுதிநேர அதிகாரிகளை நியமித்து, நிரந்தர பணியிடத்தை படிப்படியாகக் குறைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.