அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளது : கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
தமிழகத்தின் அரசுப்பள்ளிகளில் மாணவர்களின் வரத்து அதிகரித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
கோபியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறுகையில், கோபி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 150 பள்ளிகளில் உள்ள 21 ஆயிரம் மாணவ, மாணவிகளுக்கு 500 ஆசிரியர்கள் கணித பாடத்தை புதியதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள செயலி மூலமாக எளிய முறையில் கற்றுத் தருகிறார்கள்.
கடந்த 7 ஆண்டுகளில் 45 லட்சத்து 72 ஆயிரம் இலவச மடிகணிணிகள் மாணவ, மாணவிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. 11, 12-ம் வகுப்பு படிக்கும் போதே தற்போது மடிகணிணிகள் வழங்கப்படுகின்றன. 2017- 2018 ஆம் ஆண்டு படித்த மாணவ, மாணவிகளுக்கு மடிகணிணி விரைவில் வழங்கப்படும்.
6 முதல் 8 ம் வரையிலான 20 லட்சம் அரசு பள்ளி மாணவ, மாணவிகளுக்கு டேப் வழங்க ஏற்பாடு செய்யப்படும். இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் 1 லட்சத்து 72 ஆயிரம் மாணவ, மாணவிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளார்கள். தற்போது ஆசிரியர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் போது கூடுதலாக புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவித்துள்ளார்.