'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' 'நாசா' செல்லும் மதுரை மாணவி அறிவுரை
மதுரை, அமெரிக்காவின் 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பை இந்திய அளவில் பெற்ற மூவரில் ஒருவரான மதுரை மாணவி தான்யா தஸ்னிம், 'மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ள வேண்டும்' என்றார்.'கோ 4 குரு' என்னும் அமைப்பு இந்திய அளவில் சர்வதேச விண்வெளி அறிவியல் போட்டியை இணையதளம் மூலம் நடத்துகிறது. வெற்றி பெறுவோரை 'நாசா' விண்வெளி மையத்துக்கு அழைத்துச் செல்லும். நடப்பாண்டிற்கான போட்டியில் 11 ஆயிரத்து 700 பேர் பங்கேற்றனர். முடிவில் மூவர் தேர்வு செய்யப்பட்டனர்.அதில் மதுரை கடச்சனேந்தலை சேர்ந்த தான்யா தஸ்னிம் 15, என்ற பத்தாம் வகுப்பு மாணவியும் ஒருவர். இவரது தந்தை ஜாபர் உசேன் டீக்கடை வைத்துள்ளார். தாயார் சிக்கந்தர் ஆசிரியை. தான்யா தஸ்னிம் கூறியதாவது:சிறு வயதிலிருந்தே அறிவியல் மீது அதீத காதல் உண்டு. 5ம் வகுப்பிலேயே எனது கதாநாயகனாக அப்துல்கலாமை தேர்ந்தெடுத்தேன். புத்தகங்கள் மூலம் அவரை ஆழமாக படித்தேன். இதனால் விண்வெளி அறிவியல் மீது ஈடுபாடு ஏற்பட்டது. 'கோ 4 குரு' அமைப்பு நடத்திய போட்டியில் பங்கேற்று 'நாசா' விண்வெளி ஆராய்ச்சி மையம் செல்லும் வாய்ப்பு கிட்டியுள்ளது. இதில் எல்லையற்ற மகிழ்ச்சி.அக்., 1ல் துவங்கும் இப்பயணம் 10 நாள் கொண்டது. முதல் 3 நாட்கள் 'நாசா' விண்வெளி மையத்தில் இருப்பேன். அப்போது அங்குள்ள நடைமுறைகளை விளக்குவர். விண்வெளி தொடர்பான உபகரணங்களை நேரில் பார்வையிட முடியும். வான்இயற்பியல் படித்து விண்வெளியில் பறப்பதே என் கனவு. அது நனவாக இப்பயணம் உதவி புரியும். இளம் வயதிலேயே என் தேடலை விரிவுபடுத்தினேன். மாணவர்கள் அலைபேசி, 'டிவி'யை புறந்தள்ளிவிட்டு படிப்பிலும், உலக அறிவை பெறுவதிலும் கவனம் செலுத்தினால் எட்டா உயரத்தையும் எட்டிப்பிடிக்கலாம், என்றார்