அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை மேம்படுத்த வட்டார வள மையங்களை இணைக்க முடிவு
அரசுப் பள்ளிகளின் கல்வித் தரத்தை அதிகரிக்கும் வகையில் வட்டார வள மையங்களை இணைக்க பள்ளிக் கல்வித் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 2 வரை ஆண்டுதோறும் மாணவர்களின் சேர்க்கை அதிகரித்து வருகிறது. அதே வேளையில் கல்வியின் தரம், கற்பித்தல் முறை, பள்ளிகளின் உள்கட்டமைப்பு காரணமாக அரசுப்பள்ளிகளில் சேர்க்கை குறைந்து வருகிறது. இதைக் கருத்தில் கொண்டு அரசுப் பள்ளிகளில் தற்போது எல்கேஜி, யுகேஜி வகுப்புகளைத் தொடங்குதல் உள்பட பல்வேறு நடவடிக்கைகளைப் பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டு வருகிறது.
வரும் கல்வியாண்டுகளில் அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் அதிக அளவில் சேர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில் பல்வேறு புதிய முயற்சிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இந்த முயற்சிகளுக்கு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் மிகுந்த ஒத்துழைப்பை வழங்கி மாணவர் சேர்க்கையில் அதிக அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், தமிழகத்தில் இதுவரையில் அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் கீழ் செயல்பட்டு வந்த வட்டார வள மையங்களை சமக்ரசிக்ஷா திட்டத்தின் கீழ் கொண்டு வருவதற்காக 400 வட்டார வள மையங்களை மாற்றி அமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 15 பள்ளிகளை ஒன்றிணைத்து குறுவள மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. இவற்றுக்கு நடுநிலைப் பள்ளிகள் தான் தலைமையிடமாக இருந்தன. தற்போது, அந்த குறுவள மையங்கள் மேல்நிலைப் பள்ளிகளை மையமாகக் கொண்டு செயல்பட உள்ளன. இதுபோன்ற பணிகள் முடிந்தபிறகு, அரசுப் பள்ளிகளில் கற்பித்தலில் மாற்றங்கள் கொண்டு வரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி அரசுப் பள்ளிகளில் கல்வித்தரம் உயர்த்தும் பொருட்டு, பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களை நேரடியாகக் கண்காணிக்க முடியும். அதற்காக புதிய செயலியை உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் ஒவ்வொரு மணி நேரமும் பள்ளிகளின் நிலையை நேரடியாகக் கண்காணிக்க முடியும். தமிழகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் தனிப்பட்ட வகுப்பில் மாணவர்கள் வருகை, ஆசிரியர்கள் வருகையை கண்காணிக்க முடியும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.