நீங்க மட்டும் இல்லன்னா..! - மேளதாளத்துடன் வரவேற்கப்பட்ட ஆசிரியர்கள்
திருச்சி மாவட்டம், துறையூர் அடுத்துள்ளது எரகுடி கிராமம். இங்குள்ள ஏ.ஜி.எம் மேல்நிலைப்பள்ளியில் கடந்த 2002-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவர்கள், நீண்ட நாள்களாகச் சந்திக்கத் திட்டமிட்டு வந்தனர். தொடர் முயற்சிகளின் பலனாய், 17 வருடத்துக்குப் பிறகு, கடந்த மூன்று மாதங்களாக, விலாசங்களைத் தேடிப்பிடித்தும், நண்பர்கள் ஆசிரியர்களை மீண்டும் பள்ளிக்கு அழைத்தும் அதகளப்படுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்காக அவர்கள் படித்த பள்ளி நிர்வாகத்தின் உதவியோடு 2002-ம் ஆண்டு 10-ம் வகுப்பு படித்த மாணவர்களின் விலாசங்களைப் பெற்று, அந்தந்த முகவரியில் உள்ள மாணவர்களைத் தேடி ஊர் ஊராகச் சென்று தொலைபேசி எண்களைத் திரட்டி, வாட்ஸ்அப் குரூப்பை உருவாக்கி, நிகழ்ச்சி குறித்து திட்டமிட்டனர். இறுதியாக நேற்று காலை 100-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள், குடும்பம், குழந்தைகள் சகிதமாக திரண்டு வந்திருந்தனர். படிப்பை முடித்துவிட்டு வெளிநாடுகளில் இருந்தும் சிலர் நிகழ்ச்சிக்காகவே வந்திருந்தனர்.
துபாய், சிங்கப்பூரிலிருந்து என இந்த நிகழ்ச்சிக்காக முன்னாள் மாணவர்கள் வந்திருக்கின்றனர். சௌமியா என்பவர், இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டே ஆக வேண்டுமெனக் கடைசி நேரத்தில் டிக்கெட் போட்டு மலேசியாவிலிருந்து பறந்து வந்திருக்க அவரைப் பார்த்ததும் அவரது தோழிகள் ஆரத்தழுவினர்.
பள்ளித் தாளாளர் வீட்டிலிருந்து மேளதாளம் முழங்க தங்களின் ஆசிரியர்களைப் பள்ளிக்கு அழைத்துவந்த மாணவர்கள், வரிசையாக நின்று வணங்கி வரவேற்றதுடன், ஒவ்வோர் ஆசிரியருக்கும் ஒரு மாணவர் பொன்னாடை அணிவித்தும், இன்னொரு மாணவர் புத்தகம் வழங்கியும் ஆசிரியர்களைக் கௌரவித்து அன்பை வெளிப்படுத்த ஆசிரியர்கள், மாணவர்களின் அன்பால் திக்கு முக்காடிப் போனார்கள்.
`இன்னைக்கு நாங்க நல்ல நிலைமையில் இருக்கோம்னா, அதுக்கு இந்தப் பள்ளிதான் காரணம்' என முன்னாள் மாணவர்கள் தங்களுடைய 17 வருடத்துக்கு முந்தைய நினைவுகளைப் பகிர்ந்துகொண்டு பரவசமடைந்தனர். நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் மரக்கன்றுகளும், மாணவர்களுக்குப் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. பின்னர் குரூப்பா செல்ஃபி, போட்டோ கிளிக் செய்தனர். மதிய உணவை மாணவர்கள் பரிமாற, ``ஞாபகம் வருதே" பாணியில் தனது நண்பர்களுக்கு அதே நட்போடு ஊட்டிவிட்டு பாசத்தைப் பகிர்ந்துகொண்டனர்.
ஆசிரியர்களுடன் செல்ஃபி
அடுத்து முன்னாள் மாணவர்கள், நினைவுகளைப் பரிமாறினர். அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே, அவர்களின் கைகளில் சற்றுமுன் எடுத்த குரூப் போட்டோ கொடுக்கப்படவே அவர்களின் முகம் மகிழ்ச்சியில் பளபளத்தன. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான சந்துரு, ``பள்ளியில் படித்த காலங்களை நினைத்து நினைத்து நெகிழ்ந்த தருணங்கள் உண்டு. அப்படி நினைத்த சமயத்தில்தான் இந்நிகழ்ச்சிக்கான யோசனை வந்தது. முதலில் சமூக வலைதளங்களில் தொடர்பில் உள்ள நண்பர்களை ஒன்றிணைத்தோம்.
கிட்டத்தட்ட 3 மாதங்கள் கஷ்டப்பட்டு, நண்பர்களைப் பிடித்தோம். எங்களுடைய ஆசிரியர்களை நாங்கள் கௌரவப்படுத்துவதற்கும், அவர்கள் போட்ட விதையான நாங்கள், இன்று விருட்சமாக வளர்ந்திருப்பதை அவர்களுக்குக் காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக இந்நிகழ்ச்சி அமைந்தது. 17 வருடங்களுக்குப் பிறகு எல்லோரும் சந்தித்துக்கொண்டது மிகவும் மகிழ்ச்சியான தருணம்" என்றார்
இறுதியாக நிகழ்ச்சி முடிந்தும் கிளம்ப மனமில்லாமல், நட்போடு பிரிந்த அவர்களின் நினைவுகள் அதே பள்ளியில் வலம் வந்துகொண்டே இருக்கின்றன..
நல்ல நண்பர்கள் கிடைப்பது பெரும் வரம்தான்.