அனைத்து மாணவர்களுக்கும் மாலை நேர வகுப்பு துவங்க கோரிக்கை
புதுச்சேரி: அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் மாலை நேர வகுப்புகள் துவங்க வேண்டும் என வன்னிய சமுதாய வளர்ச்சி இயக்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இயக்க தலைவர் விஜயக்குமார் விடுத்துள்ள அறிக்கை;புதுச்சேரி காங்., அரசின் நோக்கம், செயல்பாடு அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் சமமாக இருக்க வேண்டும். முதல்வர் நாராயணசாமி, சுதந்திர தின உரையில், அரசு பள்ளிகளில் பயிலும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை உள்ள ஆதிதிராவிட மாணவர்களுக்கு மட்டும் மாலை நேர வகுப்புகள் (டியுசன்) துவங்கப்படும் என அறிவித்தது ஏற்புடையது கிடையாது.
அரசு பள்ளிகளில் அனைத்து சமுதாய மாணவர்களும் பயிலும் நிலையில், ஒரு குறிப்பிட்ட வகுப்பில் அனைத்து சமுதாய மாணவர்கள் ஒற்றுமையுடன் ஏற்றத்தாழ்வு இன்றி இருக்கும் நிலையில், மதிப்பெண் குறைவான மாணவர்கள் அனைத்து சமுதாயத்திலும் இருக்கின்றனர். ஆனால், ஒரு குறிப்பிட்ட சமுதாய மாணவர்களுக்கு மட்டும் தனி மாலை நேர வகுப்பு துவங்குவது மாணவர்களை ஜாதி ரீதியாக பிளவை ஏற்படுத்தும். அனைத்து சமுதாய மாணவர்களிலும் முழு மதிப்பெண் பெறாத மாணவர்கள் இருக்கிறார்கள்.எனவே, புதுச்சேரி அரசு அனைத்து சமுதாய மாணவர்களுக்கும் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை மாலை நேர வகுப்புகள் துவங்கப்பட வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.