எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள்: இன்று இறுதிக்கட்ட கலந்தாய்வு
எம்பிபிஎஸ், பிடிஎஸ் மருத்துவப் படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு புதன்கிழமை நடைபெறுகிறது.
தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ், பிடிஎஸ் இடங்களுக்கான முதல்கட்ட கலந்தாய்வு கடந்த மாதம் 8-ஆம் தேதி தொடங்கி 19-ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த முதல்கட்ட கலந்தாய்வின் முடிவில் காலியிடங்கள், மாணவர்கள் சேராததால் ஏற்பட்ட காலியிடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டில் இருந்து திரும்பக் கிடைத்த இடங்களுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு 30-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரை மூன்று நாள்கள் நடைபெற்றது.
கலந்தாய்வில் பங்கேற்று இடங்களை பெற்றவர்கள் தாங்கள் தேர்வு செய்த கல்லூரியில் சேர்ந்தனர். அரசு மருத்துவக் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு வகுப்பு கடந்த 1-ஆம் தேதி தொடங்கியது. இந்த நிலையில், கலந்தாய்வு முடிவில் மீதமுள்ள இடங்கள் மற்றும் கல்லூரிகளில் சேராமலும், கல்லூரிகளில் சேர்ந்து இடைநின்றவர்களால் ஏற்பட்டுள்ள காலியிடங்களுக்கான இறுதிக்கட்ட கலந்தாய்வு சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் புதன்கிழமை நடைபெறுகிறது. பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு காலை 9 மணிக்கும், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்) பிரிவினருக்கு 10.30 மணிக்கும், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பிரிவினருக்கு 11.30 மணிக்கும், எஸ்.சி., பிரிவினருக்கு 2 மணிக்கும், எஸ்.சி., (அருந்ததியர்) பிரிவினருக்கு 3 மணிக்கும், எஸ்.டி., பிரிவினருக்கு 3.30 மணிக்கும் கலந்தாய்வு நடைபெற உள்ளது.