சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை
தமிழகத்திலுள்ள சத்துணவு மையங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்தனர். அரியலூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற அச்சங்கத்தின் ஆண்டுப் பேரவை கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இதர தீர்மானங்கள்: சத்துணவு ஊழியர்கள் அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். சத்துணவு ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ரூ.5 லட்சம் வழங்க வேண்டும்.
குடும்பப் பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ.9 ஆயிரம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கு ஏற்பட குழந்தைகளின் உணவுக்கு ரூ.9 மானியம் வழங்க வேண்டும். புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் சத்துணவுப் பணியிடத்துக்கு 507 ஆண்களை நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்துக்கு அச்சங்கத்தின் மாவட்டத் தலைவர் வி.ராமலிங்கம் தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜி.பஞ்சாபிகேசன் தொடக்க உரையாற்றினார். தமிழ்நாடு சத்துணவு சங்க ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலர் அண்ணாதுரை சிறப்புரையாற்றினார். முன்னதாக மாவட்டத் துணைத் தலைவர் கே.கொளஞ்சியப்பன் வரவேற்றார். முடிவில் மாவட்ட இணைச் செயலர் ஆர்.செல்வி நன்றி தெரிவித்தார்