ஆராய்ச்சி உதவி தொகைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றத்தின் உறுப்பினர் செயலர், சீனிவாசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:தமிழக அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம் சார்பில், இளம் அறிவியல் அறிஞர்களுக்கு, ஆதரவு ஊதியம் அளித்தல் என்ற திட்டம் நடைமுறையில் உள்ளது. இதன் கீழ், இளம் அறிவியல் ஆராய்ச்சியாளர்களின், ஆராய்ச்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில், மாதம் தோறும், 10 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.இளம் ஆராய்ச்சியாளர்கள், ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி தொழில்நுட்பங்களின் நுணுக்கங்களை, முதுநிலை அறிவியல் அறிஞர்களுடன் சேர்ந்து, கற்று கொள்ளும் வகையில், இந்த உதவித் தொகை வழங்கப்படுகிறது.
இந்த திட்டத்திற்கான விண்ணப்பங்கள் www.tanscst.nic.in என்ற, இணையதளத்தில் வழங்கப்பட்டுள்ளன.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, இரண்டு படிவங்களாக, உறுப்பினர் செயலர், தமிழ்நாடு அறிவியல் தொழில்நுட்ப மாநில மன்றம், சென்னை - 600 025 என்ற முகவரிக்கு, செப்., 6 வரை அனுப்பலாம்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.