மொபைலில் சோலார் பேனல்! - டிசைனுக்கு காப்புரிமை வாங்கிய ஷியோமி
ஒரு ஸ்மார்ட்போனின் பின்பக்கம் என்பது உபயோகமில்லாத ஒன்றாகவே இருக்கிறது. அண்மையில் சில மொபைல் நிறுவனங்கள் அவர்களது மொபைல்களில் பின்பக்கமும் டிஸ்ப்ளேவைக் கொடுத்திருந்தார்கள். ஆனால், அவர்களின் முயற்சி பெரிதாக வரவேற்பைப் பெறவில்லை. இப்போது ஷியோமி நிறுவனம் முற்றிலும் புதிய வசதி ஒன்றை ஸ்மார்ட்போனில் பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சோலார் பேனலை ஒரு ஸ்மார்ட்போனின் பின்பக்கம் பொருத்துவதுதான் ஷியோமியின் திட்டம். அதற்கான காப்புரிமை தகவல்கள் இப்போது இணையத்தில் வெளியாகியுள்ளன. முன்புறம் ஃபுல் வியூ டிஸ்ப்ளேவைக் கொண்ட அந்த ஸ்மார்ட்போனில் பின்பக்கம் கேமராவுக்குக் கீழே சிறிய அளவில் இந்த சோலார் பேனல் இருக்கிறது. ஷியோமி காப்புரிமை வாங்கப்பட்டுள்ள அந்த வடிவமைப்பில் ஹெட்போன் ஜாக் இடம்பெறவில்லை.
மேலும், முன்புற கேமராவோ, பாப் அப் கேமராவோ இல்லை. எனவே, கேமரா இதில் திரைக்கு அடியில் கொடுக்கப்பட வாய்ப்புள்ளது. ஒரு ஸ்மார்ட்போனில் அனைத்து வசதிகளும் தொடர்ந்து மேம்பட்டு வரும் வகையில் பேட்டரியில் பெரிதாக எந்த மாற்றமும் கடந்த வருடங்களில் நடைபெறவில்லை. பேட்டரியின் அளவு அதிகமாகக் கொடுக்கப்பட்டாலும் சார்ஜிங் ஏற்றுவது தேவையாக இருந்து வருகிறது. ஷியோமி அடிக்கடி சார்ஜிங் ஏற்றும் தேவையை இந்த சோலார் பேனல் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது