உடற்கல்வி ஆய்வாளர் காலிப் பணியிடங்கள்: பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க வலியுறுத்தல்
தமிழகம் முழுவதும் 32 மாவட்டங்களில் காலியாக உள்ள உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்களை பணிமூப்பு அடிப்படையில் நியமிக்க
வேண்டும் என தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் உள்ளன. அந்தந்த மாவட்டங்களில் குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டல அளவிலான போட்டிகளை நடத்தி, வெற்றி பெற்ற அணிகளை மாநில போட்டிக்கு அனுப்பி வைப்பது, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளுக்குச் சென்று உடற்கல்வி தொடர்பாக ஆய்வு மேற்கொள்வது, மாதத்துக்கு 5 பள்ளிகளைப் பார்வையிட்டு, பதிவேட்டில் கையெழுத்திடுவது, மண்டல, மாநில அளவிலான விளையாட்டு அணிகளைத் தேர்வு செய்து, தமிழகம் சார்பில் தேசியப் போட்டிகளில் பங்கேற்க வைப்பது போன்ற பணிகளை உடற்கல்வி ஆய்வாளர்கள் மேற்கொள்வர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்தப் பணியிடங்கள், கடந்த 6 ஆண்டுகளாக தமிழகத்தில் 32 மாவட்டங்களில் காலியாக உள்ளன. இவற்றுக்கு பொறுப்பு அதிகாரிகளே நியமிக்கப்பட்டுள்ளனர். உடற்கல்வி ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்படாததால், அதற்காக காத்திருப்பவர்களும் ஏமாற்றமடைகின்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் சங்கத்தினர் கூறியது: உடற்கல்வி ஆய்வாளர் பணியிடங்கள் நிரப்பப்படாததால், பணி மூப்பு அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் நிலை 1-ல் உள்ள ஒருவரை பொறுப்பு ஆய்வாளராக நியமித்துள்ளனர்.
நிகழாண்டில் குறுவட்டம், கல்வி மாவட்டம், மண்டல, மாநிலப் போட்டிகள் நடத்தவும், வீரர்களைத் தேர்வு செய்யவும் தமிழக அரசு ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
இதை பொறுப்பு அதிகாரிகள் நடத்துவதால், முறைகேடுகள், தவறுகள் நடக்க வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனவே, உடற் கல்வி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப வேண்டும். அதுவரை விளையாட்டு நுட்பம் அல்லது பணி மூப்பு கொண்டு உடற்கல்வி ஆசிரியர்கள் 10 பேரை கொண்ட குழுவை நியமித்து, அதன்மூலம் போட்டிகளை நடத்த ஏற்பாடு செய்யலாம். இதேபோல், மாணவர்களுக்கான பரிசுத் தொகை, நடுவர்களுக்கான மதிப்பூதியம் ஆகியவற்றை அவரவர் வங்கிக் கணக்கில் செலுத்தினால் முறைகேடுகள் தவிர்க்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர்.